பலகைப் பென்சிலிலிருந்து உடைந்த பேனா, இறுதியில் விசைப்பலகை வரை — கையெழுத்து எழுதும் எளிய செயல் தரும் ஏதோ ஒன்றை, தட்டச்சு தர முடியாது என்பது பற்றிய ஒரு தியானம்.
பேனா....இதைப் பற்றி நான் எழுதுவது உங்களுக்கு ஒரு வேளை விநோதமாக இருக்கலாம். ஆனால்...பேனா என்பது என்னைப் பொறுத்த மட்டில் வெள்ளைத் தாளில் குனிந்து, விதவிதமான எழுத்துப் பூக்களை இறைத்து நமக்கு ஒரு அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தர வல்ல ஒரு செங்கோலாகவே தெரிகிறது! எழுத்தைப் படைக்கும் ஒரு அதிசயமான மந்திரக் கோலாகத் தெரிகிறது! கதையும், கவிதையும், காவியமும்...கணக்கற்ற பொதினங்களும் இந்தப் பேனாவால் உருவான காலம் ஒரு பொற்காலம் அல்லவா?
நீர்மையின் நீட்சியாய், கருநிற, நீல நிற, செந்நிற மேலும் பச்சை நிறத்தில் எழுத்துக்களைத் தந்த அந்த மையுற்றுப் பேனாக்களை, ஒரு உற்ற தோழனாக, உயர் திணையில் வைத்துப் பார்க்கத் தான் தோன்றுகிறது...சமயங்களில் நமது பதினோராவது விரலாகக் கூட இந்தப் பேனா நமக்கு உதவி செய்திருக்கிறது.
சரியாகத் தெரியவில்லை...நான்காம் வகுப்போ அல்லது ஐந்தாம் வகுப்போ தொடங்கும் போது பேனாவில் எழுதிப் படிக்கும் முறை ஆரம்பமானது என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் அப்பா ராஜா வீட்டில் வேலை செய்யும்போது பயன்படுத்தும் காப்பி பென்சில்(கார்பன் பென்சில்) என்னைக் கவர்ந்ததாக இருக்கும். வயலட் கலரில் வசீகரமாகக் கைகளில், கால்களில் எல்லாம் அதை வைத்து வரைந்து கொண்டிருப்பேன். ஏன்? மருதாணி மாதிரி கூட நகத்தில் வைத்துத் தீட்டிக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்த இங்க் கறை சாமான்யமாகப் போகாது...திட்டு வாங்கினாலும் கூட வித்தியாசமான அந்தப் பென்சில் எனக்குப் பிடித்த ஒன்றாகவே இருந்தது...
அப்பாவின் சட்டைப் பையில் இருக்கும் பேனாக்கள் அத்தனையும் எனக்குத் தந்து விட மாட்டாரா என்று இருக்கும்! கேரட் கலரில் தடிமனாக ஒரு பேனா, அப்புறம் கறுப்பு நிறத்தில் ஒரு பேனா..அதன் மூடியில் வித்தியாசமான சொருகுப் பின் இருக்கும்! அந்த பேனா அந்தக் காலத்து பாலங்காரா திலகரின் தலைக் குல்லாவை நினைவு படுத்தும்! அப்புறம் நல்ல மரக் கலரில் கொலாஜ் பண்ணியது போல ஒரு பேனா...ஒவ்வொன்றும் பத்து மில்லி இங்காவது கொள்ளும்படி இருக்கும்...தடித்த குண்டுகுண்டான பேனாக்கள்...
நம்மாத்தில் இருந்த உள்ளில் இருந்த ஜன்னல் பிறையில் தான் இந்த இங்க் பாட்டில், இங்க்:பில்லர் சமாச்சாரங்கள் இருக்கும். அந்த இளம்பச்சை நிற இங்க் பில்லரை இங்க் பாட்டிலுக்குள் முக்கி இரு விரல்களால் அழுக்கிப் பேனா மையை உறிஞ்சிப் பேனாவுக்குள் இட்டு நிரப்பிப் பிறகு அதை நிப்பினால் உள்ள கழுத்துப் பகுதியை வைத்து, அப்பா அதை டைட்டாகத் திருகி விடுவார். ஒரு சொட்டு கசியாது....இதைப் பார்க்கும் போதே அத்தனை கவித்வமாக இருக்கும். நானும் இங்க் போடரேன் பேர்வழி என்று நிறையக் கொட்டி மொழுகி இருக்கிறேன். ஆனாலும் அப்பா திட்ட மாட்டார்....ஊம்ம் என்று லேசான உறுமல் மட்டுமே...
ஒரு தடவை அப்பாவே இங்க் தயாரித்தார். அதுவும் பச்சை இங்க். ஏராளமாக...தாராளமாக நிறைய பாட்டில்களில் ஊற்றி வைத்தார். நாமெல்லாம் புகுந்து விளையாடி விட்டோம். யார் செய்த திருவிளையாடலோ, பச்சை இங்க் எல்லாம் கொட்டி விட்டது. அந்த ஜன்னல் பிறையிலிருந்து கீழே வழிந்து....படு கோரமாக சுவர் ஒரு பிகாஸோ ஓவியம் போல (!) ஆய்டுத்து.
ஜன்னலுக்குக் கீழ் தான் பெரிய ஊஞ்சல் பலகை இருக்கும். அதில் அரிசி டிராம் இருக்கும். அந்தப் பச்சை இங்க் அரிசியிலும் விழுந்து பச்சரிசி நிஜமாலுமே பச்சை அரிசியாகி விட்டது. அம்மா நிஜமாலுமே எல்லோரையும் ரெண்டு போடு போட்டார். அப்பாவுக்கும் ஒரு போடு (ஹிஹி)...
ஆனால் அப்பாவிற்கு இந்த மைக்கூடு எல்லாம் ஒரு நிம்மதிக் கூடு என்பேன். ஒரு தியானம் செய்வது போலத்தான் அவர் பேனாக்களில் மையை நிரப்புவார். அப்படி ஒரு லயிப்பு இருக்கும்....அந்த மை பாட்டில் வயிறு பருத்த செட்டிப் பொம்மை மாதிரி உருண்டு திரண்டு இருக்கும். மை பாட்டில் காலியானால் கூட அதைத் தூக்கி வீசி விட மாட்டார். அதன் மூடியில் ஓட்டை போட்டு ஒரு ஸ்டவ் திரியை உள்ளே நுழைத்துக், காலி பாட்டிலில் மண்ணெண்ணெய் விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் விளக்காக மாற்றி விடுவார்.
மின்சாரக் கட்டுப்பாட்டை வீட்டுக்குள் கொண்டு வர அப்பா செய்த முயற்சி அது. அந்த மைக்கூடு விளக்கில் அப்பா எழுதத் தொடங்குவது, ஏதோ எழுத்தே தன்னைச் சுடரேற்றி ஒளி காட்டுவது போல் இருக்கும்! பேனாவின் மறைகள் இறுகி விடாமல் இருக்க ஒருவிதமான கிரீஸ் எடுத்துத் தடவி மெதுவாய் அதன் கழுத்து மறையில் வைத்துத் திருப்பி முடிக்கையில், ஒரு அற்புதமான கவிதையை எழுதி முடித்த திருப்தி முகத்தில் தெரியும்! நிறைய சாணிக் கலர் பேப்பர்களும் ரூல்டு நோட்டுப் புத்தகங்களும், பெய்ன்ட் செய்யப்பட்ட நோட்டுகளும் அப்பா வைத்திருப்பார். காட்டாறாய் ஓடும் பேராறு, மலையிலிருந்து கீழே இறங்கும்போது அருவியாய்க் கொட்டுமே...அது மாதிரித் தான் அப்பாவின் எழுத்தும். ஒவ்வொரு நாளும் அந்தப் பேனாவை அப்பா எடுக்காமல் இருந்ததே இல்லை...
எதையேனும் நம்பிக்கையோடு எழுதுவது என்பது அவருக்கே உரிய ஒரு உயர்ந்த பழக்கமாக இருந்தது...தெளிவின் அடையாளமாக அப்பாவின் எழுத்துக்கள் இருந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது. ஆன்மாவின் அழுத்தமான பதிவுகள் அவை...அப்பாவின் ஆளுமை அவரது பாடல்களில், எழுத்தில் தெரிகின்றனவே! அவரின் தனித்துவம், அவரது எழுத்தில் பிரதிபலிக்கின்றதே!
அப்பா எழுதுவதே ஒரு அழகிய காட்சியாக இருக்கும். வெளிச்சம் வருமிடத்தில் பளிச்சென்று அமர்ந்து கொள்ளுவார். ஒரு சாய்வு மேஜையில் நிறைய நோட்டுப் புத்தகங்கள் இருக்கும். ஒரு குடுவையில் நிறையப் பேனாக்கள் இருக்கும். ஒரு வேள்வியில் ஈடுபட்ட முனிவனைப் போலத் தான் அப்பா தனது படைப்பை அங்கே எழுதிக் கொண்டிருப்பார். ஒரு வள்ளி திருமணமோ, ஒரு இராமாயண இசைக் காவியமோ, ஒரு திருநாவுக்கரசர் வரலாறோ...அல்லது திருநீல கண்ட நாயனார் சரிதமோ அங்கே காவியங்களாக மலர்ந்து கொண்டிருக்கும்! அந்த தெய்வீகமான எழுத்தில் பரமாத்மாவைக் கண்ட ஜீவாத்மாவாக அப்பாவின் தோற்றம் இருக்கும்!
நானும் எழுத்தை மோகித்ததாலோ என்னவோ, அப்பாவின் அநேகப் பேனாக்கள் எனக்குக் கிடைத்து விடும்! எந்தப் புதிய பேனா தமக்குக் கிடைத்தாலும் அதை எனக்குத் தந்து விடுவார் அப்பா. எனக்கு மெலிதாக எழுதும் பேனாக்களே ரொம்பவும் பிடித்தமானதாக இருந்தது. பட்டை பட்டையாக எழுதும் பேனாக்களை ஏரெடுத்தும் பார்க்க மாட்டேன்...சன்னமான சாரலைப் போல் எழுதும் பேனாக்கள் எனது எழுது ஆர்வத்தையும்...அழகாக எழுத வேண்டுமென்கிற பாங்கினையும் எனக்குள் வளர்த்தன என்பேன். விஜயாக்கா, மற்றும் சுகுணாக்காவின் முத்து முத்தான எழுத்துக்கள் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தன...
திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் முதலாவதாக வந்ததற்கு ஒரு பால்பாயின்ட் பேனாவும் (அப்போதுதான் பால்பாயின்ட் அறிமுகமான சமயம்) ஒரு திருக்குறள் புத்தகமும் கிடைத்தது. அந்தப் பேனாவை அப்பாவிடம் தந்து விட்டு மையூற்றி எழுதும் ஒரு பேனாவை வாங்கிக் கொண்டேன். ஒரு பாக்ஸில் இரண்டு அல்லது பேனாக்கள், HB பென்சில்கள், ஒரு ஸ்கேல் வைத்து ஒரு பொக்கிஷம் போல எடுத்துச் செல்வேன். என்னைக் கேட்டால், எது வேண்டுமானாலும் இரவல் தருவேன்...ஆனால் பேனாவை மட்டும் அத்தனை சுலபமாக யாருக்கும் தந்து விட மாட்டேன்.
இப்படிப் பேனாவோடு இருக்கும் எனது தொடர்பு இன்றுவரை தொடர்கிறது...எந்த ஒரு ஸ்டேஷனரி கடைக்குப் போனாலும், பேனாக்கள் செக்ஷன் பக்கம் போகாமல் இருந்ததில்லை...ஒரு தடவை குழந்தைகளுக்கு அவர்களது பெயரைப் பொறித்துப் பேனாக்களைப் பரிசாக வழங்கி இருக்கிறேன்.
மோன்ட்ப்லாங் பேனாக்கள் ரவிக்கு ஆபீசில் ஒவ்வொரு வருஷமும் கிடைக்கும்...அந்தப் பேனாக்கள் மீது எனக்கு ஒருவித மயக்கமே உண்டு...சிங்கப்பூர் National Arts Council நடத்திய கோல்டன்பாயிண்ட் அவார்ட் எனக்குக் கிட்டியபோது எனக்குத் தரப்பட்ட முதல் பரிசான பத்தாயிரம் டாலர் பரிசைக் காட்டிலும், அத்துடன் கூடவே 680 டாலர் பெறுமானமுள்ள தங்கப் பார்க்கர் பேனா கிடைத்த போது அப்படி மகிழ்ந்து போனேன். என்னுடைய தமிழை அங்கீகாரம் செய்து என்னையே எனக்கு அடையாளம் காட்டிய அந்தப் பேனா எனக்கொரு பொக்கிஷம்!
உண்மையில் பேனா என்பது வெறும் நினைவு மட்டுமல்ல. அது நம்மில் ஒரு பகுதியாக ஒரு கால கட்டத்தில் வந்த துணை என்பேன்! நம்மை எழுதவும் சிந்திக்கவும் வைத்த ஒரு மாபெரும் சக்தி அல்லவா?
இப்போது கணினி வந்து விட்டது. பெரும்பாலும் பேனாவை யாரும் கையாள்வது இல்லை. ஓலைச் சுவடிகளில் எழுதுவது மறைந்து, இறகினால் மை தொட்டு எழுதிய காலம் போய், பேனா என்ற ஒன்றைக் கண்டுபிடித்து மை ஊற்றிக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல முத்துமுத்தாக எழுதிய காலம் போய்...இப்போது கணினி வந்து விட்டது.
என்ன செய்வது? காலத்தின் கட்டாயமாகத் தான் ஒவ்வொரு மாறுதலும் நடக்கின்றன..நாமும் காலத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் எல்லாவற்றையும் அனுசரித்தே போக வேண்டி இருக்கிறது. அதில் இந்த எழுத்துக் கலாச்சாரமும் அடங்கி விடுகிறது...பேனாவும் முடங்கிப் போய் விட்டது என்பதைச் சற்று வருத்தத்துடன் தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
ஆனாலும் அப்பாவின் பழைய கடுதாசிகளைப் படிக்கும் போதும், பாடல் தொகுப்புகள் நிறைந்த நோட்டுப் புத்தகங்களைப் பார்க்கும் போதும் அப்பாவையே பார்ப்பது போல்...அந்த உறுதியான விரல்கள் தொட்டு எழுதிய பேனாக்களே நமது சிந்தையில் வந்து வண்ண மயமான மையைத் தெளித்து எண்ணக் கோலங்களை வண்ணக் கோலங்களாக்கிக் காட்டுகின்றன. பேனாவுக்குள் மை நிறைப்பது போலக் கண்ணுக்குள் நீர் நிரம்புகிறது...
ஒரு புதுக் கவிதை எங்கோ படித்த நினைவு வருகிறது.... தான் குனிந்து நம்மை நிமிர்த்தும் மையுண்ட பெண்! என்று! உண்மைதான். பேனாக்கள் சிந்தும் முத்துக்கள் அத்தனையும் எண்ணத்தான் முடியுமா? நமது கைக்குள் அடங்கி...ஏன் நமது இரு விரல்களுக்குள்ளும் அடங்கிப் போகும் இந்தப் பேனா நம்மை உயரே கொண்டு செல்லும் ஒரு அழகிய தேவதை அல்லவா?...எனக்கு அப்படித்தான் தெரிகிறது...உங்களுக்கு??
பானுரவி Nov 4 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi