கதை 21

தீபாவளி

சமையலறையில் நெய்யும் சர்க்கரையும் வாசனை, முருங்கை மரத்தடியில் வெடிகள், விடியலில் எண்ணெய் ஸ்நானம் — ஒரு செட்டிநாட்டுக் குழந்தையின் தீபாவளி.

அந்தப் பெரிய கறுப்பு இருப்புச் சட்டியில் அரிசி பொன்னிறமாக வறுபட்டுக் கொண்டிருக்கிறது. உருண்டைக் குழுவிக் கல்லால் ஏலக்காயை அக்கா பொடி பண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வெள்ளை வெளேரென்று தேங்காய் துருவிக்கொண்டு இன்னொரு அக்கா. சமையற்கட்டை ஒட்டிக் கூடத்தை அடுத்து இருக்கும் கட்டு என்ற பகுதியில் திருகையில் ரவையும் சக்கரையும் பொடியாகத் திரிதுக் கொண்டு இன்னொரு அக்கா. முந்திரியைச் சிறிது சிறிதாக உடைத்துக் கொண்டு இன்னொரு அக்கா. நெய் மணமும் இனிப்பின் தூக்கலான வாசனையும் அந்தச் சூழலை இனிமையாக்குகின்றன. ஒ! தீபாவளி வருகிறதே? அந்தப் பண்டிகையை இனிப்பும் சுவையாகவும் கொண்டாடத் தயாராக வேண்டாமா?

என்ன நடக்கிறது? அம்மா அரிசி ஒக்காரை தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கார். பொதுவாக நமது செட்டிநாட்டு/மதுரைப் பக்கத்து வழக்கம் தான் இந்த ஒக்காரை பண்ணுவது. அதுவும் தீபாவளி வந்து விட்டால் பிள்ளையார் சுழியாக இந்த ஒக்காரையைத்தான் அம்மா முதலில் பண்ணுவார். பொதுவாகக் கடலைப்பருப்பும் பயத்தம் பருப்பும் வறுத்து ரவை போல் உடைத்து ஒன்றுக்கு முக்கால் பங்கு என்று வெல்லத் தண்ணீரில் ஒரு கிளறு கிளறிப் பிறகு நிறைய முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து நெய்யோடு பக்குவமாகக் கிளறுவதுதான் எல்லோரும் செய்வது....ஆனால் நம் அப்பாவுக்கு அரிசி ஒக்காரை தான் பிடிக்குமென்பதால் அம்மா அதைத்தான் செய்வார்...வெகு நாளிருக்கும்...மேலும் க்ரிஸ்ப்பியாக நிறைய நெய் சேர்த்துப் பண்ணி வைக்கும்போது படு டேஸ்டியாக இருக்கும். என்ன...அரிசி என்பதால் கொஞ்சம் டயம் எடுக்கும்...ஆனால் அதன் அபார ருசியைச் சொல்ல முடியாது....முழிதுக் கொண்டிருக்கும் தேங்காய்த் துண்டமும்...முந்திரியும் ..பளபளவென்று தேன் கலரில் அந்த அரிசி ஒக்காரை ஒரு ராயல் ஸ்வீட் என்பேன். வெண்னை தாழி என்ற பாத்திரத்தில் அம்மா அதைப் போட்டு வைப்பார்...

இந்தத் திரிகை என்பது மரக் கைப்பிடியோடு (சுற்றி அரைக்க வசதியாக) மேல் பகுதியும், மத்தியில் கிட்டுப்புள்ளை மாதிரி ஒரு மர அச்சும், கீழ்ப்பகுதி ஒரு வட்டவடிவக் கல்லுமாக இருக்கும். மர அச்சு உள்ள குழிப்பகுதியில் மட்டுமட்டாகப் போட்டு ரவையும் சர்க்கரையுமாக நைஸாக அதைத் திரிக்கணும்! அப்போதெல்லாம் தான் மிக்சி கிடையாதே! கீழே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு அதில் அந்தத் திரிக்கும் மாவு விழும்படியாக அரைப்பார்கள். நம்மாத்தில் ரெண்டு தினுசான திரிகை...ஒன்று வெள்ளைக் கல்லில் ஒரு புதுப்பொண் மாதிரி கொஞ்சம் நாகூக்கா இருக்கும்! இன்னொன்று அரைத்து அரைத்துப் பழகிப் போன கறுப்பு குட்டைத் திரிகை. கஷ்டமான வேலை தான்! அந்த ரவை மாவில் இளஞ்சுடான நெய்யை முந்திரி, கிராம்பு, ஏலம், சேர்த்து நிதானமான உருண்டை பிடிக்கணும்!

ஏற்கனவே அம்மா நெய் காய்ச்சி வைத்திருப்பார். மைசூர்ப்பாகும் அல்வாவும் கிளறுணுமே! ஒன்றிரண்டு ஸ்வீட் இல்லை. ஒக்காரை, ரவலாடு, அல்வா, மைசூர்ப்பாகு, சிலசமயம் தேங்காய் பர்:பி,...இப்படியான தினுசில் இருக்கும். இந்த இனிப்புக்களை பாலன்ஸ் பண்ணும் விதமாக விஜயாக்கா கார பக்ஷணம் பண்ண ஆயத்தம் செய்வார்.

நிலக்கடலை, பொட்டுக்கடலை, மைதா பிஸ்கட், கலர்கலரான ஜீராமிட்டாய், முத்துமுத்தாய் பூந்தி, ஓமப் பொடியுடன் பசேலென்ற கறிவேப்பிலையை பெருங்காயம் மணக்கப் போட்டு ஒரு மிக்ஸர் பண்ணுவார். பலே பலே! அப்புறம் முச்சரி, தேன்குழல், கூடவே ரிப்பன் பக்கோடா...

இதற்கிடையே அப்பா லேகியம் பண்ண ஏதுவாக எல்லாவித மூலிகை சாமான்களையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். சுக்கு, மிளகு, கண்ட திப்பிலி, ஏலம், சிறிது அதிமதுரம், ஜீரகம், ஓமம், கொஞ்சமாக லவங்கம்...மஞ்சள், கொஞ்சமாகக் கொத்துமல்லி விதை என்று வெறும் இருப்பச்சட்டியில் வாசனையுடன் வறுத்து, வெழுமூனாக அரைத்து எடுத்து, வெல்லமும் நெய்யும் நல்லெண்ணையும் சேர்த்துக் கிளறுணும்!

அப்பாவுக்கு இந்த லேகியம் எல்லாம் ரொம்பவே பிடித்த சமாச்சாரம் என்பதால் பண்ணும் அளவு சற்று அதிகமாகவே இருக்கும்....அந்த லேகியம் கருகருவென்று பளபளப்பாக மின்னிக்கொண்டு அத்தனை இனிப்பும் காரமும் உள்ளே போகும் போது நாக்கு விறுவிறுன்னு இருக்கும்....லேகியத்தை வைப்பதற்கென்றே ஒரு பறங்கிக்காய் வடிவத் தூக்குப் பாத்திரம் இருக்கும்...உருண்டை ஸ்பூனில் வழுக்கிக் கொண்டு விழும் அழகே தனி...

இதெல்லாம் சமையற்கட்டு விஷயங்கள். முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே டைலர் சுப்பையாவிடம் கொடுத்துச் சின்னக் காஞ்சீபுரம் பட்டு பாவாடை எனக்குத் தயாராக இருக்கும்...ரமணி, ராஜா, சேகருக்கு ரோட்டுக்கடை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கித் தைத்த ஒரே மாதிரியான சட்டையும் ட்ரவுசரும்...காரைக்குடி AKR ஜவுளி ஸ்டோர்ஸில் வாங்கிய புடைவைகள் அக்காக்களுக்கும் அம்மாவுக்கும்...விஜயாக்கவும் அப்பாவும் போய் வாங்கி வருவார்கள்...

மேற்சொன்னவை எல்லாம் இரண்டாம் பட்சமென்பது போல் நாங்கள் எல்லாம் அப்பா வாங்கி வரும் பட்டாசுக்குத் தான் வெகுவாகக் காத்துக் கொண்டிருப்போம். சின்ன சமோசா மாதிரி இருக்கும் ஓலைப் பட்டாசு, பொட்டு வெடி, லட்சுமி வெடி, சர வெடி, கம்பி மத்தாப்பு, சாட்டை, விஷ்ணு சக்கரம், புள்வாணம், அப்புறம் ராக்கெட்.....கம்பி மத்தாப்பு எனக்கு அன்றும் இன்றும் ரொம்பப் பிடித்தவை....அதன் வண்ண மயமான ஒளிச்சிதறல் எத்தனை அழகு! ரமணிதான் ஹீரோ....இந்த ஆனைவெடி, லட்சுமி வெடி எல்லாம் அவனுக்கு என்றே வாங்கினார் போல துர்ள் பண்ணிக் கொண்டிருப்பான். வீட்டுக்கெதிரே இருந்த முருங்கை மரத்தின் கிளைகளில் இந்தப் பட்டாசைக் கொளுத்திப் போடுவான்...அவனுடன் கூடவே ராஜாவும்...எனக்குப் பயம் கண்களில் தெரியும்.

அப்பா அந்தப் பயத்தைப் போக்கடிக்க ஒரு நீண்ட குச்சியில் ஒரு ஆணியை அடித்து அதில் அந்தப் பட்டாசைச் செருகி வெடிக்கச் சொல்லுவார். வாசல் திண்ணையில் தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருக்கும்...அதில் இந்தப் பட்டாசைக் காட்டி வெடித்துக் கொண்டிருப்போம். சேகரும் நானும் வாசற்படியில் அமர்ந்து பொட்டுவெடி (கேப்பு) வெடித்துக் கொண்டிருப்போம்...அது தவிர பாம்பு மாத்திரை என்று ஒன்று இருக்கும். கறுப்பு வண்ண மாத்திரை...அதைப் பற்ற வைத்ததும் புஸ்ஸென்று சீறிக்கொண்டு பாம்பு உயிர்த்தெழும்....

தீபாவளியன்று காலைப் பொழுது அத்தனை அமர்க்களமாக இருக்கும்...அப்பா தான் எண்ணை வைத்து விடுவார். வெற்றிலை, இஞ்சி, மிளகு, மஞ்சள் பொடி போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெய் அந்தப் பித்தளைப் பேலாவில் இருக்கும்...சீயாக்காய்ப் பொடியும் வாசனைப்பொடியும், கஸ்தூரி மஞ்சள் பொடியும் தனித்தனிக் கிண்ணங்களில் இருக்கும்....கிணற்றடியில் வெந்நீர் தவலையில் தண்ணீர் தளதளனு கொதிச்சுண்டு இருக்கும்.

சுகுணாக்காவும், சாவித்ரிக்காவும் தான் நமது குளியலுக்குப் பொறுப்பு...பேபி ஒரு காசித் துண்டை வச்சுண்டு தலையை துவட்டி விடுவாள். அப்பாவிடம் மஞ்சள்குங்குமம் தடவிய புது ட்ரெஸ்ஸை வாங்கிக் கொண்டு படு உற்சாகத்தோடு அதை உடனே போட்டுக் கொண்டு முதலில் சுவாமிக்கு, அப்புறம் அம்மா அப்பாவுக்கு என்று நமஸ்காரம் செய்யணும். பண்ணி வைத்த பக்ஷணங்கள், உடைகள், பட்டாசு, லேகியம் எல்லாம் சுவாமி முன்னால்!...லலிதாத்ரீசக்கரத்துக்கு பேபி ஒரு சில்க் துணியில் புது பாவாடை தைத்து வைத்திருப்பதை அம்மா சார்த்தி விடுவார். முதலில் அம்மா லேகியம் தான் தருவார். ஒருபுரம் பளீர்னு பஞ்சுருண்டை மாதிரி இட்டிலி வெந்து கொண்டிருக்கும்...நீளநீளமாக வாழைக்காயும், வட்ட வட்டமாகக் கத்திரிக்காயும் ஒரே மாதிரி நறுக்கப்பட்டு பஜ்ஜிக்குத் தயாராக இருக்கும்....தேங்காய் துருவும் சப்தம்...இது சட்டினிக்கு!

அது அல்லவா தீபாவளி? எத்தனை உற்சாகம்! எத்தனை சந்தோஷம்!... முக்கியமாக எல்லோருக்கும் அம்மா பகிர்ந்து கொடுத்த அந்த நேசமும் பாசமும் கலந்த தீபாவளி இப்போது எங்கு தேடினாலும் கிடைக்காது....பண்டிகையின் முக்கியத்துவமும், பகிர்தலின் அவசியத்தையும் உணர்த்திய அந்தப் பெரிய மனிதர்கள் இன்று புகைப்படங்களாகி விட்ட நிலையில் அவர்கள் காட்டிய அன்பும், ஆசியும் இன்னமும் நமக்கு தீப ஒளிவட்டங்களாக வழி காட்டுகின்றனவே!

ஒரு டிவி கிடையாது...தொலைபேசி கிடையாது....வானொலி கிடையாது. ஆனால் நம்மிடையே காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு அன்பெனும் சுவற்றை எழுப்பிய தெய்வங்கள் அல்லவா அத்தனை பெரியோரும்! அந்தச் சுவற்றை எந்த வெடியாலும் தகர்க்க முடியாது என்பது தானோ இந்தத் தீபாவளியின் உட்பொருள்? அதைத்தானே அந்த நரகாசுரனும் யாசகமாகக் கேட்டான்? இல்லை என்றால் ஒரு மரணத் தருவாயில் உலக மக்கள் ஒன்றாக இருந்து நன்றாகக் கூடி இன்பமாக இந்தத் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருப்பானா?

வெடி வெடித்த பிறகு சுழும் புகை வட்டத்துக்குள் நமது அம்மாவை, அப்பாவை, நமது சகோதரிகளைப் பார்க்கிறேன்...கண்ணில் நீர் தளும்புகிறது. அது நிச்சயமாக அந்தப் புகையினால் அல்ல என்பதை உணர்ந்த அந்த மேன்மக்கள் கை அசைத்து, உச்சி முகர்ந்து வாழ்த்துவதாக நெகிழ்ந்து போய் உணருகிறேன்....கனத்த நெஞ்சம் இப்போது லேசாகிறது! இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்ற எண்ணம் தலை தூக்குகிறது....ஒவ்வொருவர் வாழ்விலும் அன்பால் விளைந்த ஒளி வட்டங்கள், நிறைய சந்தோஷத்தைத் தர வேண்டுகிறேன்...உண்ணும் இனிப்பைப் போல ஒவ்வொரு நாளும் இனிதாக அமைய வேண்டுகிறேன்...ஒவ்வொரு நாளும் திருநாளாக, வைபவப் பெருநாளாக, ஆனந்தம் பொங்க வாழ வேண்டுகிறேன்...

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்! பானுரவி Nov 11 2020

அன்புடன், பானுரவி

With love, Banooravi