விடியற்காலையில், அம்மா வேப்பிலையை வாசல் கல்லில் அரைப்பார். அடுத்து என்ன வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் — நாமும் வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
சமையற்கட்டுக்கும் முற்றத்துக்கும் இடைப்பட்ட அந்தக் கதவுக்கு அருகே முற்றத்தில் தளதளவென்று வேப்பங்கொழுந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விடிகாலை வேளையில், முற்றத்து அம்மியில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வெறுமுணக அந்த வேப்பங் கொழுந்தை வைத்து அரைத்து எடுக்கிறார் அம்மா. அரைத்த விழுதைச் சிறு சிறு உருண்டைகளாக அக்கா உருட்டி வைக்கிறாள். உறியிலிருந்து பசந்தயிர் எடுக்கப்பட்டு ஒரு சின்ன புனா தம்ப்ளரில் வைக்கப்படுகிறது. சின்னத் தட்டில் நாட்டுச் சக்கரையும் கூடவே...என்ன நடக்கிறது?
முரண்பட்டுச் சற்றும் உடன்பாடு இல்லாமல் கொஞ்சம் கடுப்போடு தான் நாம் அங்கே உட்கார்ந்திருப்போம்....வேறு வழியில்லை. கசப்பான அந்த வேப்பிலைக் கொழுந்து உருண்டையை அம்மா வாயில் போட்டு, உடனே அந்தப் புனா தம்ப்ளர் தயிரையும் வாயில் விடுவாள். கசந்து வழியும்...கூடவே அந்த நாட்டுச் சக்கரையை வாங்கிக் கொண்டு ஓடுவோம்....வயிற்றுப் பூச்சி இருந்தால், அதை அகற்றவும், வயிற்றைச் சுத்தமாக்கவும்தான் இந்தப் போராட்டம் நடக்கும்!
அப்புறம் ஒரு மூன்று மாசத்துக்கு ஒரு தடவை என்ற ரீதியில் விளக்கெண்ணை படலம். நமது அனா.ருனா. வீதியிலிருந்து, சந்து வழியே நேரே போனால் காசியாபிள்ளை வீடு வரும். அங்கிருந்து கொஞ்சம் சறுக்கலாக இருக்கும் வழிதான் ரோட்டுக்கடை. கொஞ்சம் DOWNTOWN மாதிரி இருக்கும் அந்த இடத்தில் ஒரு கோமுட்டிச் செட்டியார் வீட்டிலிருந்து தான் இந்த விளக்கெண்ணையை வாங்கி வருவோம். இந்திராணியும் நானும். ஒற்றை ஆரஞ்சு வண்ண நாமம் இட்டுக்கொண்ட இரண்டு மூதாட்டிகள் அந்த வீட்டில் இருந்துகொண்டு ஆமணக்கு எண்ணை வியாபாரம் செய்து வந்தார்கள். பாட்டிலில் தருவார்கள். தேன் கலரில் கொழகொழவென்று...இப்போது போல் REFIND ODOURLESS OIL இல்லை. ஒரு மாதிரியான வாசமடிக்கும்...இப்போதும் குமட்டுகிறது. செக்கு எண்ணை என்பதால் ஒரிஜினலாக இருக்கும். கடுக்காயைப் பொடித்து வெந்நீரில் இட்டுக் கறுப்பான கஷாயம் எடுத்து அத்தோடு இந்த விளக்கெண்ணையைக் கலந்து அம்மா வாயில் ஊற்றுவார். "கண்ணை மூடிண்டு டபக்னு முழுங்கு" என்று வேறு சொல்லுவார். உமட்டிக் கொண்டு வரும்....பாதியை வெளியில் துப்பி விடுவதுண்டு. அதுவும் ராஜா, சேகர்....முக்கியமாக ரமணி எல்லோரும் படு ஆர்ப்பாட்டம் செய்து... கலாட்டா பண்ணுவார்கள். அம்மா விட மாட்டார்...கூடவே யாரேனும் ஒரு சகோதரி அழுக்கிப் பிடித்து வாயில் ஊற்றிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்...CONSTIPATION & INDIGESTION வராமல் இருக்கத்தான் இந்தப் பாடு! அந்த எண்ணையைக் குடித்து விட்டுக் குதிக்கச் சொல்லுவார் அம்மா. பிறகு எல்லோரும் ஒரு அரை மணி நேரத்திலேயே எதிர்த்த கொல்லைப்புறம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடுவோம்....நாலைந்து தடவையாவது இப்படி நடக்கும்...அதன் பிறகு வயிறு கபகபவென்று பசியெடுக்கும்.
சாயங்காலம் நிஜமாகவே நல்லெண்ணெய் சேர்த்து மெத்துமெத்தாக வார்த்த மெந்திய தோசையும், சட்டினியுமாக அம்மா அமர்க்களப் படுத்தி விடுவாள். மெந்தியம் வயிற்றுக்குக் குளிர்ச்சி என்பதால்...அத்தோடு நீர் மோரு....பெரிய தம்ப்ளரில்.
இது தவிர கொழுந்து வெற்றிலையை ஓமத்தோடு அரைத்து வடிகட்டி அதையும் குடிக்கக் தருவார். பிறிதொரு சமயம், இளம் இஞ்சியையும் துளசியையும் வைத்து அரைத்துக் கொஞ்சம் தேன் விட்டு இஞ்சி சுரஸம் தருவார். இதெல்லாம் வயிற்று உபாதையிலிருந்து நம்மைப் பாதுகாக்கத்தான்! சமயங்களில் வெந்நீரில் விக்ஸ் போட்டு வேவு பார்ப்பதும் உண்டு. இதனால் ஜலதோஷம் போய்விடும்...
காய்ச்சல் வந்து விட்டால் கவனிப்பே தனி....மிளகு, சீரகம், ஓமம், வேப்பம்பூ எல்லவற்றையும் கறுக்க இருப்புச்சட்டியில் வறுத்து, சொய்ங்க்னு அதில் நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொஞ்சம் தேனோடு தருவார் அம்மா. கொஞ்சம் இருமி விட்டால் போதும்...நெய்யில் மிளகை வறுத்து அதைப் பொடி செய்து கருப்பட்டியோடு கலந்து உருட்டித் தருவார்....அது அப்படியே நெய்மணம் வீசிக் கொண்டு இரண்டே நாளில் கபத்தை எடுத்து விடும்.
அப்பாவைப் பற்றிச் சொல்லியே ஆகணும். இந்தக் கை மருத்துவத்தில் மிகவும் தேர்ந்தவர். கண்மாய்ப் பக்கத்திலிருந்து, ஆடாதோடை என்ற பச்சிலையைப் பறித்து வருவார். அதை இடித்துச் சாறெடுத்து, அத்தோடு சில மருந்துப் பொருட்களைச் சேர்த்து லேகியம் தயாராகும். அப்புறம் ஆடு தின்னாப் பாளை என்றொரு பச்சிலை...இதை எல்லாம் கொண்டு வரக் கூடவே நானும் அப்பாவோடு சைக்கிளில் போய் இருக்கிறேன். பாவம்...அக்காக்கள் தான் யாராவது கல்லுரலில் போட்டு அரைத்து, வடிகட்டித் தருவார்கள்...அம்மா பெரிய அருக்கஞ் சட்டியை வைத்து லேகியம் கிளறணும். அது தவிர அப்பா கடுகை அரைத்து அதை இலுப்பக் கரண்டியில் விட்டுச் சுட வைத்துக் காலில் & முதுகில் தடவச் சொல்லுவார். இந்த வேலை எல்லாம் நான் விருப்புடனே செய்திருக்கேன்..என்றாலும் .சில சமயம் போடும் சாம்பிராணிப் பற்று...சாமான்யமாக அது குளிக்கும்போது போகாது...அப்பாவின் இந்தத் தொல்லைகள் சற்றே அதிகம்தான்...அப்பா குளிக்கும்போது அப்பாவின் உடம்பைத் தேய்த்து விட்டதுண்டு...போறுமா போறுமா என்றுதான் இந்தப் பிடிக்காத வேலையைச் செய்வோம்! ஹாஹா...
ஆர்.எஸ். பதி என்று ஒரு மருந்து...யூடிகொலேன் மாதிரி...அப்புறம் மஞ்சள் வண்ண அமிர்தாஞ்சன்...இதெல்லாம் வீட்டில் எப்போதும் ஸ்டாக்கில் இருக்கும். தலைவலி என்றால் நெற்றிப் பொட்டில் இரண்டு வெற்றிலையை ஒட்டிக்கொள்வதும், சுக்கை அரைத்துப் போட்டுக் கொள்வதும் வழக்கமானது. கொஞ்சம் வயிறு உப்புசம் என்றால், வயிற்றைச் சுற்றி விளக்கெண்ணையை லேசாகச் சூடு படுத்தித் தடவுவார்கள்.
அப்பா கொல்லையிலிருந்து குப்பைமேனிச் செடியின் தழைகளோடு, மஞ்சளையும் சந்தனத்தையும் வைத்துப் பன்னீரோடு அரைத்துத் தடவி விடும்படி சொல்வார். இன்னமும் அதன் தழும்புகள் ஒன்றிரண்டு முழங்கால், கணுக்காலில் இருந்து அந்த நாட்களை நினவு படுத்துகின்றன. அது தவிரக் களிம்பு என்று ஒன்று....தாங்க முடியாது அதன் நெடி. கந்தக நெடி அடிக்கும். இந்தச் சிரங்கில் ரொம்ப அவதிப்பட்டது இந்திராணிதான்.
பிறிதொரு சமயம் அம்மை போட்டு விட்டது...எனக்கு வந்த கையோடு ராஜாவுக்கும். முத்து முத்தாக உடம்பெல்லாம். உடனே வாசலில் அம்மா வேப்பிலைக் கொத்தைச் செருகி வைத்தார். இது மற்றைய அண்டை வீட்டாருக்கு அறிவிப்பு செய்த மாதிரி. அந்நியர்கள் யாரும் அம்மை போட்ட வீட்டில் நுழையக் கூடாது...அவர்களும் பிறர் வீடுகளுக்குப் போகக் கூடாது. அம்மை என்பது மிகவும் மரியாதையாகக் கையாளப் பட வேண்டிய ஒன்றாகக் கருதப்பட்டது. வீட்டில் வாசனைப் பொருட்களை (சோப், பவுடர்,) உபயோகப் படுத்தக் கூடாது. அதுபோல் சமையலிலும் எண்ணைத் தாளிப்பு கூடாது. எனக்கும் ராஜாவுக்கும் மூன்று வேளையும் தயிர் சாதமும் குட்டி வெங்காயமும் தான்...
அரித்தால் சொரிந்து கொள்ள முடியாது....பாவம் சுகுணாக்கா தான் பனையோலை விசிறியைத் தண்ணீரில் நனைத்துக் குளிர்ச்சியாக விசிறி விடுவார். கிட்டத்தட்டப் பத்து நாட்களுக்கு மேல் இந்த அம்மை நோய் இருக்கும்...மருத்துவமனை எல்லாம் கூடாது. கொஞ்சம் அந்த வடுக்கள் காயத் தொடங்கியதும் பெரிய ஜோடித் தவலையில் தண்ணீர் நிரப்பி, அதில் நிறைய வேப்பிலை போட்டு, மஞ்சள் பொடி சேர்த்துத் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அன்றைய தினம் துள்ளுமாவு இடித்துப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு விநியோகம் செய்வார் அம்மா. கூடவே மகமாயிக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைப்பார்...
ஒரு நாள் கூட மருத்துவரிடமோ, ஆஸ்பத்திரிக்கோ எந்த ஒரு காரணத்துக்கும் போனதில்லை. சகலமும் வீட்டு வைத்தியம் தான். பூச்சி கடியோ, விஷக்கடியோ ஏதேனும் அவ்வகையில் இருந்தால், உடம்பு முழுதும் மந்திரமாவது நீறு என்று சொல்லி உடனே விபூதியைத் தான் தடவுவார்கள். லங்கணம் பரம ஔஷதம் என்று சில சமயம் வயிற்றில் போட்டுத் திணிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.
நிறையத் தடவைகளில் பல்வலி வந்து அவதிப் பட்டிருக்கோம். கொல்லைப்புறத்தில் ஒரு செடி இருக்கும்..பேர் மறந்து போச்சு. அதன் இலையை ஒடித்தால் ஒருவிதப் பிசின் வரும், அதைப் பல் வலிக்கும் இடத்தில் தடவுவார்கள். இல்லாவிட்டால் கிராம்பு போட்டு அதில் எண்ணை விட்டுக் காய்ச்சி அதைத் தடவிக் கொள்ளணும். கோபால் பற்பொடி பயன் படுத்தும் முன்பாகக், கரிப்பொடிதான். நெல் உமியைக் குவித்து அதில் ஒரு தணலைப் போட்டு எரிந்து, அது கரியானதும், அதில் சிறிது உப்பு, லேசாகப் பச்ச கற்பூரம் போட்டு நன்றாகப் பொடித்துப் பாட்டிலில் இருக்கும். நமது விரல் தான் பிரஷ்...சில சமயம் சாம்பலைப் பயன்படுத்திப் பல் துலக்கி இருக்கோம். கொள்ளை பக்கத்து வள்ளி தனது தேங்காய் துருவிப் பல்லில் செங்கல்லைப் பொடித்துத் தேய்ப்பதைப் பார்த்து நானும் அது போல் முயற்சித்து அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கேன். பின்னே எகிறு கிழிய வந்து நின்றால், யாருக்குத் தான் கோபம் வராது? ஒரு வழியாகத் திருச்சி வந்த பிறகுதான் பேஸ்ட்டும், பிரஷும்!
அந்த நாட்களில் எது செய்தாலும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டே செய்தார்கள். எதைச் செய்தாலும் ஒரு பயபக்தியுடன், அர்ப்பணிப்புடன் செய்தார்கள். குடும்பத்தில் அறம் என்பது அனைத்திலும் தெரிந்தது. கலப்படமில்லாத வீட்டுச் சமையலில் ஆரோக்கியம் மிளிர்ந்தது. எனக்குத் தெரிந்து, நாம் கானாடுகாத்தானில் இருந்த வரையில், பெரியவர்கள் யாரும் சர்க்கரை வந்தோ, இரத்தக் கொதிப்பு வந்தோ அவதிப் பட்டதாகத் தெரியவில்லை.
வீட்டிலேயே அப்பளமும், வடகமும் செய்து விடுவார்கள். அந்த அப்பளத்து உருண்டையும், வடாம் மாவும் தான் எத்தனை ருசி! அதுவும் பாதி காய்ந்து கொஞ்சம் வதக்கனு இருக்கிற வடாம் படு பிரமாதமாக இருக்கும். வீட்டிலேயே சாம்பார் பொடி, ரசப்பொடி, தோசை மிளகாய்ப் பொடி, வெண்ணை எடுத்து நெய்.
தேன் அடையிலிருந்து எடுத்த சுத்தமான தேன் பிரான்மலையிலிருந்து வந்து விடும். அத்தோடு தினையும் வந்துவிடும். தினையை வறுத்து மாவாக்கித் தேன் கலந்து சாப்பிடத் தருவார்கள். (முருகப் பெருமானுக்கு வள்ளி செய்த நிவேதனப் பண்டம் அது...) அத்தனையும் அம்மாவின் கை மணத்தோடு அதனதன் இயல்பான சுவை குன்றாமல் இருக்கும்.
ஹோட்டல் என்றால் என்னவென்று தெரியாது. வெளி இடங்களுக்கு அல்லது ரயில் பயணமென்று சென்று வந்தால், இடையில் சாப்பிட வீட்டிலேயே இட்டிலி மிளகாய்ப்பொடி போட்டு செதும்ப நல்லெண்ணெய் விட்டு வாழை இலையில் கட்டிக் கொள்வதும், புளியஞ்சாதம் எடுத்துச் செல்வதுமே வழக்கம். வெண்ணையாகத் தயிர் சாதம் பிசைந்து, அதில் கொத்துமல்லித் தொக்கைப் போட்டும் எடுத்துப் போவதுண்டு. கூஜாவில் தண்ணீர். இப்போது கூஜா என்பதே புழக்கத்தில் இல்லை...இந்தப் பார்சல் எல்லாம் விஜயாக்காவின் டிபார்ட்மென்ட். கச்சிதமாக இருக்கும்.
இப்படி ஒன்று மாற்றி ஒன்றாகச் செய்து கொண்டு வீட்டுப் பெண்களும் அம்மாவும் பயங்கர பிசியாக இருப்பார்கள். சாப்பாடு, குழந்தைகள் பராமரிப்பு, வீட்டு வேலைகள், வெளி வேலைகள், உறவினர் வருகை, விருந்தோம்பல், இவற்றோடு கை வேலைகள் செய்தல்....(இதைப் பற்றிப் பின்னால் எழுதுவேன்). என்று செய்து தங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும், வீட்டுக்குப் பாங்கான வகையில் அவையடக்கமாகவும் இருந்தார்கள் என்பதெல்லாம் இப்போது விளங்குகிறது அல்லவா?
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்....இந்த உடம்பையும், அதன் சரியான பராமரிப்பையும் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு ஒரு நல்ல மேனியையும், உடல் ஆரோக்கியத்தையும் நமக்கு அளித்தது நமது பெற்றோர்கள் அல்லவா? அவர்கள் ஏற்படுத்தித் தந்த அந்தப் பழக்கங்களை நாம் இன்று மேற்கொள்ள வில்லைதான்...ஆனாலும் அவர்கள் நம்மைச் சோறிட்டும், காய்கனி இட்டும், நோய் வந்தால் நொந்து போகாமல் காப்பாற்றியும் அல்லவா இந்த அரிய உடம்பைச் செப்பனிட்டுத் தந்திருக்கிறார்கள்? அந்த உடல் நலத்தைப் பேணுவது என்பது, ஒரு விதத்தில் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை அல்லவா? அப்படித்தான் எனக்குப் படுகிறது...உங்களுக்கு? அன்புடன் பானுரவி/28th June 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi