வாழ்க்கை பின்னோக்கிப் பார்த்தால்தான் புரிகிறது. நேரம் இருக்கும் வரை, எனது நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
"ஏய் தொம்பச்சி... உள்ள வா" என்ற அம்மாவின் குரல் கேட்கிறது. வீட்டு வெளி வாசலில் ரமணி, மூக்கன், முருகப்பன், வெள்ளையன், கண்ணன் என்ற பசங்களோடு கிட்டிப் பிள்ளை விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஊஹூம்! அம்மா கரடியாய்க் கத்தியும் வீட்டுக்குள் போகவில்லை. "என்ன...வழக்கம் போல ஏதேனும் ரெண்டு பாத்திரம் தேய்க்கச் சொல்லுவா...இல்லாட்ட சுலோகம் சொல்லச் சொல்லுவா".. மனசுக்குள் இப்படி எண்ணிக்கொண்டு விளையாட்டில் தீவிரமாகிறேன்.
தூரத்தில் அப்பா வருவது தெரிகிறது. "ஃபாதர் ஈஸ் கமிங்' என்று கத்திக்கொண்டே நானும் ராஜாவும் ஓடுகிறோம். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு வருவது அத்தனை சந்தோஷம்! சேகர் சமர்த்தாகப் படியில் உட்கார்ந்து கொண்டிருப்பான்..கை கால்களில் ஒருவண்டிப் புழுதி...மடமடவென்று முற்றத்துத் தொட்டியில் நிரம்பியிருக்கும் சில்லென்ற கிணற்றுத் தண்ணீரில் கைகால்களை அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்து விடுவோம்....சமயங்களில் அம்மா கர்ச்சட்டிப் பழையது பிசைந்து கைகளில் உருட்டி உருட்டிப் போடுவதுண்டு. உள்ளங்கையில் வாங்கிக் கொண்ட சாதத்தைக் கட்டை விரலால் குழித்துக் கொண்டு அதில் கொஞ்சம் வற்றல் குழம்பை வாங்கிக் கொண்டு சாப்பிடுவோம்...ஆளாளுக்கு...வயிறு ரொம்பி வெடித்துவிடும் போல் இருக்கும்...அந்த சாதத்தில் வெங்காயம், பச்ச மிளகாய், ஓமம், கறிவேப்பிலை, என்று சகலமும் மணத்துக்கொண்டிருக்கும்...
சாயங்காலங்களில், பெரிய கல்லுரலில் சாவித்ரிக்கா குழவியாட்ட, சுகுணாக்கா மாவைத் தள்ளிவிட்டுக் கொண்டு இட்டிலிக்கு அரைத்துக் கொண்டிருப்பார்கள். "உனக்கென்ன...நீ வக்கீலாத்து மாட்டுப்பொண்ணு" என்றும் "ஆமாமாம்...நீ மட்டும் என்னவாம்? கலேக்டராத்து மாட்டுப் பொண்ணாப் போகப் போறே" என்றும் ஒருவருக்கொருவர் தமாஷாகப் பேசிக்கொண்டே அரைப்பார்கள்...நான் மலைத்துப் போவேன்..."கடவுளே! இப்படிக் கல்லுரலில் நானும் ஒரு நாளைக்கு அரிக்கும்படி ஆகுமா? ஊஹூம். நான் மாட்டேன்" என்று என் மனசுக்குள்ளே ஒரு கூச்சல் கேட்கும்! பெரிய முக்கோணக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு அம்மா வார்க்கும் மெந்திய தோசை...சட்னியோடும், எள்ளு மிளகாய்ப்பொடியோடும் கமகமக்கும். ஏற்கெனவே நாலு தோசை சாப்பிட்டாச்சு...ஐந்தாவது தோசை பசுந்தயிரோடு சாப்பிடக் காத்துக் கொண்டிருப்பேன். இப்படி வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் சாப்பிட்டுக் குண்டுபானு என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டேன்.
காலை வேளையில் முற்றத்தில் சலக்சலக்கென்று பேபி பெரிய காரீயச்சொம்பில் தயிர் கடைந்து வெண்ணை எடுக்கும் தருணம்....சேகரும் நானும் பக்கத்திலேயே...நப்பாசைதான்...வேறென்ன? கொஞ்சம் வெண்ணை உருட்டித் தர மாட்டாளா என்றுதான்...அந்த வெண்ணை ஒருவாரம் சேர்ந்தபின் நெய் ஆகிவிடும். நெய் காய்ச்சியாதும் எஞ்சிய கசண்டில் பொரிஅரிசிமாவு போட்டுக் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பும் கைப்புமாக அம்மா ஆளுக்கு ஒரு உருண்டைஎன்று தருவாள்.. ஆஹா! அது அமுதம் அல்லவா?
அசால்டாகப் பேசிக்கொண்டே அரிவாள்மணையில் அம்மா காய் நறுக்கும்போது என் மனசு கவலையில் ஆழ்ந்துவிடும்...அச்சோ! இது என்ன கஷ்டம்...இந்த லாகவமெல்லாம் எனக்கு சுத்தமா வராது...அப்பா மாதிரி கத்தியிலதான் கட் பண்ணணும்...என்ற எண்ணம் ஓடும். அதேபோல விஜயாக்கா துருவலகாயில் தேங்காய் திருவும்போது, அந்தப் பளீரென்ற தேங்காய் துருவலை வாயில் போட்டுக்கொண்டு ஓடிவிடுவேன், கூடவே விசாரம் தலை தூக்கும்...நிச்சயம் நான் இதுமாதிரி பண்ணப்போறதில்லை...இத்தனை கஷ்டமா இருக்கே ஒவ்வொண்ணும் என்று அங்கலாய்த்துப் போவேன்.
இதெல்லாத்தையும் விடப் படு போரான விஷயம் எச்சில் இடுவதுதான். அதுவும் சாணி போட்டுக் கையை எடுக்காமல், ஒரே டேக்கில் சாப்பிட்ட இடத்தை மெழுகணும்...அப்புறம் சுருணையை எடுத்து வந்து துடைக்கணும்..."ஏம்மா! இந்தச் செட்டியார் வீட்ல பண்ற மாதிரி ஏன் சாப்பிட்ட இடத்தைப் பெருக்கக் கூடாது?" என்று அம்மாவிடம் கேட்டு, "சரியான வணங்காமுடி...உடம்ப வணங்கிக் காரியம் பண்ற வழியப்பாரு" என்று திட்டு வாங்கியது நேற்றுப் போல் இருக்கு.
அப்புறம் வரும் பற்றுப்பாத்திரம் தேய்ப்பது...கடவுளே! தேங்காய் நரர் கொண்டு கரம்பைமண், அரப்பு, புளி போன்றவற்றை வைத்துக் கொண்டு,,,,அனேகமாக சுகுணாக்காவும், பேபியும் தான் இந்த வேலையைச் செய்வார்கள். பாத்திரங்கள் எல்லாம் பளிச்சென்று பாலிஷ் போட்டது போல் இருக்கும்...எல்லாம் பித்தளை, வெண்கலம். தாமிரம் என்ற வகையில் இருக்கும். பெரிய சைஸ் மட்டுமல்ல...கனமாக வேறு இருக்கும்...
புலர்ந்தும் புலராத காலைப்பொழுது...தலையில் ஈரத்துண்டோடு, அம்மா இதமாக எழுப்புவது சங்கீதமாக இருக்கும்...அதட்டல் இல்லாத மிரட்டல் இல்லாத அந்தக் குரல்தான் நான் கேட்ட முதல் மந்திரம்...டக்கென்று எழுந்துவிடுவோம். கூடவே சுகுணாக்காவும் குரல் கொடுப்பாள். குழம்பும் கூட்டும் அம்மா அன்றாடம் சொல்லும் ஆதித்யஹ்ருதயத்தோடும், மற்றைய ஸ்லோகங்களோடும் பக்தி மணத்தோடு பரிமளிக்கும்.
சாதம் வடிக்கும் கொதாவரிக்குண்டு, காதுக்குண்டான் போன்றவற்றில் இருக்கும் ஓட்டையை அடைக்க அரிசிமாவைக் குழைத்துவைத்து, விறகடுப்பில் காட்டிப் பிறகு ஒல்நீர் (உலைநீர்) வைத்துச் சாதம் வைப்பாள் அம்மா. அந்த நாட்களில், எட்டரை மணிக்குள் சாதம், குழம்பு, கறி எனப் பண்ணி எல்லோருக்கும் டிபன்பாக்சில் போட்டு...இன்னமும் சக்கரைவள்ளிக் கிழங்கு மேன்திய்க் குழம்புச் சாதமும், அதனுள் புதைத்து வைத்த பெரிய சைஸ் மாவடுவும் இன்னமும் நாக்கில் ருசிக்கிறது.
என்னுடைய சான்ஸ் வந்து எப்போதாவது மண் அடுப்பைச் சாணி போட்டு மெழுகும் சமயங்களில் எனக்கு எரிச்சல் மண்டிக் சொண்டு வரும்...அந்தச் சாணிச் சுருணையைப் பார்த்தாலே பிடிக்காது...வேண்டா வெறுப்பாக அந்த வேலையைப் பண்ணும்போது...இந்த வேலை எல்லாம் நிச்சயமா செய்யும் நிலைமை வரக்கூடாது என்று நினைத்துக் கொள்வதுண்டு.
தண்ணீர்...அன்றைய கால கட்டத்தில் தண்ணீருக்கு அலைந்த தவிப்பு இருக்கே...தாமிரக்குடம், பித்தளைக்குடம், தோண்டி என்று எல்லாவற்றையும் புளி போட்டுத் தேய்த்து, மாட்டா ஊரணி, வயிரவன் செட்டி ஊரணி என்று அக்காக்களோடு போய்த் தண்ணீர் எடுத்து வந்த நாட்கள். காலை இரண்டு நடை, மாலை இரண்டு நடை என்று போய்க் கொணர்ந்த தண்ணீர் அத்தனை அருமையான நல்லநீர். சால் என்ற பானையில் குளிர்ஜலம்...மற்றபடி ஜோடித் தவலையில், அடுக்கில் நிரப்பி வைத்துக் கொண்டு சமையலுக்குப் பயன்படுத்துவாள் அம்மா.
வாரம் தோறும் ஞாயிறன்று செட்டிநாடு குளத்தில் போய் துணிகளைத் துவைத்து எடுத்து வருவோம். பழுப்புக் கலர் சவுக்காரம் மைதூர்ப்பாகு மாதிரி இருக்கும். குளிக்க சிவப்புக் கலர் லைப்பாய் சோப்பு. நாங்களெல்லாம் பொடிசுகள்...அக்காக்கள்தான் துவைப்பார்கள். முற்றத்தில் கம்பியை முறுக்கிக் கட்டிய நீண்ட கொடிகள். அப்பா அதிலெல்லாம் கெட்டிக்காரர். பேபிதான் நறுவிசாகத் துணிகளை உலர்த்தி மடித்து வைப்பாள்.
கைவேலை, ரிப்பேர் என்று எந்த ஆளும் வீட்டுக்கு வந்து பார்த்ததில்லை. அப்பா சகல கலாவல்லவர். கயிற்றுக்கட்டில், மரக்கட்டில், பீரோ, கொலுப்படிகள், சுவாமி அலமாரி என்று எல்லாம் அப்பாவின் கை வண்ணம்தான். கடிகார ரிப்பேர் எல்லாம் அப்பாவுக்கு அத்துபடி...அவ்வப்போது தேள்கடி, விஷக்கடி என்று வருபவர்களை மந்திரித்து அப்பா அனுப்புவார். இதுதவிர இடையன்குண்டு கிராமத்திலிருந்து நஞ்சப்பன் கொண்டுவரும் உடும்புத் தோளைப் பதப்படுத்துக் கஞ்சிரா செய்து விடுவார். அந்தக் கஞ்சிராவின் பிரேமுக்கு ஓட்டைக் காலணாவைத் தேய்த்துக் கொடுக்கணும்.
இப்படி எதைச் சொல்ல? எதை விட?? ஒவ்வொரு நாளும் ஒரு விதம்...எத்தனை பாமரத்தனமாக இருந்திருக்கிறோம் என்பது நாளாவட்டத்தில் புரிந்தது...எதையாவது செய்து, ஒரு நல்ல உத்தியோகத்தைத் தேடிக்கொள்ளுவதில் இருந்த உத்வேகம் சமைப்பதிலோ, வீட்டு வேலை செய்வதிலோ சுத்தமாக இல்லை...மேலும், கடைசிப்பெண் என்று சொல்லிச் சொல்லி என்னை அதிகம் வேலை வாங்காமல் விட்டார்கள்.. அம்மா மட்டும் அவ்வப்போது 'தொம்பச்சி மாதிரி நடக்காதே..குதிக்காதே ..ரெண்டு பாட்டு சொல்லிக்கோ, ஸ்லோகம் கத்துக்கோ என்றதெல்லாம் சுத்தமாகக் காதில் ஏறியதில்லை.
இன்று....நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. கடவுள் நான் எதை எல்லாம் கஷ்டம் என்று நினைத்து மறுகிக் கொண்டிருந்தேனோ, அவற்றை எல்லாம் எளிமைப்படுத்தி, எல்லாம் எனக்குக் கைகூடும் வகையில் செய்த அற்புதத்தை என்னவென்று சொல்வது! ....அடுப்பைச் சாணம் கொண்டு மெழுக அவசியமில்லை. விரலால் ஒரு திருகு திருகினால் பற்றிக்கொள்ளும் காஸ் அடுப்பு. குடமாவது, பக்கெட்டாவது...ரூமுக்கு ரூம் வாஷ்பேசினுடன் கூடிய பைப். சுத்தமான தண்ணீர் இருபத்திநான்கு மணி நேரமும்.(..பாறையடித் தெருவில் தண்ணீருக்குக் கால்கடுக்க நின்ற நாட்கள் நினைவில் நிழலாடுகிறது..) குளத்தையோ, கிணற்றையோ தேடிப்போகாமல்.வாஷிங் மெஷினில் துணி துவைக்க முடிகிறது. கல்லுரல் இல்லை...அம்மிக்குழவி இல்லை...சுலபமாக கிரைண்டரும், மிக்சியும், வேலையை சுலபமாக்குகின்றன... டொய்ங் டொய்ங் என்று பித்தளை பில்டரில் அம்மா போடுவது போல் தட்டித் தட்டிக் காபி டிகாக்ஷன் போட அவசியமில்லை...காபி பெர்குலேட்டரும், காப்ஸ்யூல் காபியும் வந்தாச்சு.
விட்டுவிட முடியாதபடி சமையற்கட்டு என்னை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது...எத்தனை பேர் வந்தாலும் மலைக்காமல் சமைக்கும் திறமை கைவந்திருக்கிறது...நித்தியச் சமையல் மட்டுமின்றி, அனைத்து வகை இனிப்புகளும், பட்சணங்களும் பண்ணத் தெரிந்திருக்கிறது..... அன்றாடம் அனைவரையும் நினைத்து நினைத்து இந்த வாழ்வில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை அசை போடுகிறேன்...நிறைய அனுபவங்கள்...அவை மனம் நிறைந்த அனுபவங்கள் கூட...அள்ள அள்ளக் குறையாத பெருநிதியம் போல் சிறு பிராயம் முதல் இன்று வரை எத்தனை எத்தனை அனுபவங்கள்...வாழ்க்கை அழகானது தான்!
அன்புடன், பானுரவி
With love, Banooravi