தாலாட்டுகள், திரைப்படப் பாடல்கள், சாஸ்திரியக் கச்சேரிகள், பரதநாட்டியப் பயிற்சிகள் — வாழ்வை வடிவமைத்தவை. துக்கம் வந்தபோது இசை தந்த அமைதியான ஆறுதல்.
நேற்றைக்கு என்ன சமைத்தாய் என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பேன்...சட்டென்று நினைவுக்கு வந்துவிடாது. ஆனால் பால்ய நாட்களில், சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களும், நிகழ்வுகளும் அப்படியே கண்முன்னே திரைப்படம் போல் ஓடுகின்றன. இது எல்லோருக்கும் ஏற்படும் குணாதிசயமா....தெரியவில்லை.
வீட்டில் ஏதேனும் பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கும் சுபாவம் எனக்கு இருந்தது. முற்றத்தில் சாப்பாட்டுத் தட்டுக்கள் எடுத்து வைக்கப் போகும் போது சுவற்றில் படும் வெளிச்சத்தில் நிழலுருவமாக ஆடிக் கொண்டிருப்பேன்.... டீ பானு! எத்தனை நாழி? என்று அம்மாவின் குரல் என்னை நிஜ உலகுக்குக் கொண்டுவரும். அப்படி ஒரு லயிப்பு எனக்கு நடனத்தின் மீது...
அந்த ஆர்வத்தை அறிந்து கொண்டு என்னை ரொம்பவும் என் சகோதரிகள் ஊக்கப் படுத்தினார்கள். முசிதமு பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் ஆடிய பாட்டு விஜயாக்காவின் கற்பனையில் உதித்த பாடலாகும். புதையல் படத்தில் வரும் விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...இந்தப்பாட்டை "என்நாளும் உன்னோடு விளையாடி இன்புறுவேன்" என்று அக்கா எழுதி, ராதை மாதிரி எனக்கு வேஷமிட்டுக் கிருஷ்ணனை நினைத்துப் பாடி ஆடுவது போல இருக்கும். நிறையக் கைதட்டல் மட்டுமல்லாது வெள்ளி மெடலும் எனக்குக் கிடைத்தது...
அதன்பிறகு வந்த ஆண்டு விழாவில் நான் மும்தாஜ்/சீதா என்ற பெண் ஷாஜஹான் என்று வேஷமிட்டு... பாவாடைதாவணியில் பார்த்த உருவமா என்ற பாட்டின் மெட்டில் "வாழ்நாளில் உன்னை என்னால் மறக்க முடியுமா?" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடினேன். ஜிலுஜிலுவென்ற சிகப்பு நிற நைலானில் ஜரிகைப் பொட்டுக்கள் டிசைன் செய்து சல்வார் மாதிரி அனார்கலி ஸ்டைலில் அழகாக ஒரு முஸ்லிம் காஸ்ட்யூம்...அதன் மீது கறுப்பு வண்ண கப்தான்...ஒரு அழகிய துப்பட்டா...வெள்ளை நிற கம்மீஸ் என்று எனது அந்த உடை எனக்கு ரொம்பவே பிடித்தமானது....பள்ளிகளுக்கு இயக்குநராக இருந்த நெ.து.சுந்தர வடிவேலு இந்த நடனத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்...என்று பேசிப் பரிசு கொடுத்தார்.
அதன் பிறகு ஒரு நாட்டியம்....காதலில் தோல்வி அடைந்த ஒரு பெண் சோகத்தில் பாடி ஆடுவது போல... .........முன்னம் அவனது நாமம் கேட்டாள்...மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்...பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்...பெம்மான் அவனுக்கே பிச்சையானாள்...அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்...அகன்றாள் அகலிடார் ஆசாரத்தை!...தன்னை மறந்தாள்! தன்நாமம் கெட்டாள்! தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!
இது திருநாவுக்கரசரின் தேவாரம் என்று நினைக்கிறேன். கணீரென்ற குரலில் சோலைச்சி டீச்சர் இதைச் சொல்லும்போது நான் நடராஜரின் திருவுருவம் வரையப்பட்ட திரைச்சீலையைப் பார்த்தபடி இருக்க வேண்டும்...அதன்பிறகு "மன நாட்டிய மேடையில் ஆடினேன்...கலை காட்டிய பாதையில் வாழுகின்றேன்" என்ற பாடலுக்கு ஆட வேண்டும். நமது அம்மா எப்போதும் இந்தப் பாடலுக்கு என்னை ஆடும்படி சொல்லிக் கொண்டே இருப்பார்.
இந்த நடனத்தின் போது நடந்த சுவையான சம்பவம்....நமது அப்பா தில்லை நடராஜப் பெருமானை எண்ணி நடனம் ஆடும்வகையில் ஒரு பாடலை இயற்றி "என்னத்துக்கு சினிமாப்பாட்டு? இந்தப் பாடலுக்கு ஏத்தமாதிரி பரத நாட்டியம் மாதிரி பானுவை ஆடப் பண்ணுங்கோ" என்று கூறினார். அதுதான் "ஆண்டவன் தாண்டவம் ஆடிய தில்லை! அதற்கிணை உலகிலோர் ஸ்தலமுமே இல்லை" என்ற அருமையான பாட்டு. ஜதியும் தாளமுமாக அருமையாக இருக்கும் அந்தப் பாட்டு வெகு நீளமாக இருக்கிறது என்று சொல்லி ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்கள்.
அப்புறம் திருக்குறள் விழா, குழந்தைகள் தின விழா என்று எல்லாவற்றிலும் எனது நடனம் நடைபெறும். ஆண்டவன் படைச்சான்...என்கிட்டே கொடுத்தான்...அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்"...இந்தப் பாட்டை அக்கா அப்படியே மாற்றினார்.
"வள்ளுவன் படைச்சான் வான்புகழ் பெற்றான்...வாழ்விக்கும் வழிதனை வகுத்து வச்சான்...
உலகம் யாவும் போற்றிடுமே இந்தக் குரளை! யாரும் ஒப்புயர்வுற்று வாழ்ந்திடச் செய்யும் குரளே! இதைக் காலமெல்லாம் கற்றறிந்து, கற்றபடி நாம் நடந்து உயர்வோம்! உயர்வடைவோம்!...இது எக்காலமும் அழிந்திடாது! எட்டுத்திசை புகழ்பரப்பும் திருக்குறள்! திருக்குறள்! திருக்குறளே!!... அந்தப் பாட்டு இப்படிப் போகும்....
இன்னொரு பாட்டு...."தமிழ்நாட்டின் எழிலைப் பாரும்! அது பேசும் மொழியைக் கேளும்!....மனம் தன்னை நீங்கி இன்பத்தில் தாவிக் குதிக்குதே! இனிமைக் கீதம் பாடுதே!!...திருவேங்கடம் முதலாய்த் தென்குமரி முனைவரைக்கும் திழக்கு மலைக்கும் மேற்கு மலைக்கும் பரந்து கிடக்குதே! தமிழன் இனமும் வாழுதே..."
அப்புறம் திருக்குறளின் பத்து குறளை வெவ்வேறு அதிகாரத்திலிருந்து எடுத்து அகரமுதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்து...உறங்குவது போலும் சாக்காடு என்று முடித்து வாழ்வின் அத்தனை அம்சங்களையும் சொல்லுவதாக ஒரு ஆடல்....படு பிரமாதமாக இருக்கும்...எனக்குத் தெரிந்து இன்று வரையில் யாரும் அவ்வாறு திருக்குறளை ராகத்தில் அமைத்து ஆடிப் பார்த்ததில்லை...
டான்ஸ் ப்ராக்டீஸ் எல்லாம் நாம்மாத்து முற்றத்தில் தான் நடக்கும். இடையிடையே சாவித்திரிக்காவும் சுகுணாக்காவும் அபிநயத்தின் சில ஆக்ஷன்களைச் சொல்லித் தருவார்கள். ஒரு பாட்டு இருக்கு...சாவித்ரிக்கா எனக்கு ஆண் வேஷம் என்பதால் ஒரு ஆண் பையன் நடப்பது போல் நடந்து ஆடணும்னு சொல்லித் தந்தது....
"ஆணாகப் பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்தபின்னும் வீணான ஐம்பம் ஏனடி? ராஜாத்தி வேண்டாத வம்புதானடி. ஆண்மயில் தோகை போலே...யானையின் தந்தம் போலே சிங்கத்தின் பிடறி போலே,....சேவலின் கொண்டை போலே பொண்ணுக்குப் பெருமை ஏதடி ராஜாத்தி... உன் பேச்சு மட்டும் அதிகம் தானடி (ஆணாக) எந்நாளும் ஆண்களுக்கே இயற்கையில் அழகு உண்டு! ஆனாலும் பெண்ணைக் கண்டு அடங்காத ஆசைகொண்டு ஏமாளிப் புத்தியினாலே...ராஜாத்தி எங்குறோமே பொண்ணு பின்னாலே....ஹாஹா. (ஆணாக)
இந்தப் பாட்டில் எனக்கு மீசை வைத்து அடர்ந்த புருவம் தீட்டி ஒரு முண்டாசு கட்டி விட்டிருப்பார்கள்....அம்மா அப்படியே திருஷ்டி சுற்றிப் போட்டது ஞாபகம் இருக்கு. ஒவ்வொரு டான்ஸ் புரோகிராம் முடிந்த பிறகும் தேங்காயை வாசலில் உடைத்துத் திருஷ்டி கழிப்பார்கள்....
அப்புறம் ஆடல் காணீரோ...அலை பாயுதே.... தில்லையம்பல நடராஜா, காணக்கண் கோடி வேண்டும், இப்படிப் பல பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கேன். பொங்கல் விழாவில் கங்கைக் கரைத் தோட்டம்...அந்தப் பாட்டைக் கேட்டது கூடக் கிடையாது.....ஆனால் அந்தப் பாட்டு மட்டுமல்ல...அதைத் தொடர்ந்து வந்த போனால் போகட்டும் போடாவுக்கும் ஒரு பாட்டம் ஆடித் தீர்த்து விட்டேன்....அத்தனை பேரும் ஸ்டேஜிலேயே வந்து நிறையப் பரிசுப் பொருட்களை...டார்ச்சு, பிளாஸ்க், பேனா, இன்னது என்ற வகை இல்லாத பிற பரிசுகள்...நினைவில்லை...ஏராளமான பரிசுகள். தந்தார்கள்.
ராஜாவுக்குப் பிடித்த வி.காமாட்சி என்ற டீச்சரிடம் (கணக்கு) ராஜா அழைத்துப் போனான். "நீ ரொம்ப நன்னா டான்ஸ் ஆடரே...நான் ஒரு பாட்டு சொல்லித் தரேன். அதுக்கு ஆடரியா?" என்றார். குடைமிளகாய் மாதிரி மூக்கும்...என்னை வழியும் முகமும், வட்டக் குங்குமமும்...இதுதான் அந்த டீச்சர்.
அந்தப் பாட்டுத் தான் இது...."வட்டமிட்ட பொட்டழகன்....கட்டுழகன் கந்தசாமி. சட்டப்படி என் கணவன் தானடி தோழி! சட்டப்படி என் கணவன் தானடி!"...இப்படிப் போகும் . (ராஜா, உனக்கு நினைவிருக்கா?)
அப்புறம் ஒரு பாட்டு. இந்தப்பாட்டும் மனதுக்கு இதமான ஒரு பாடல்... ...அரவிந்த மலர்க் கண்ணா....துயிலாய் மேகம் போன்ற வண்ணா.... உன் மாம்பழ வாயினிலே குழலை வைத்து இசைபாடி மாயப் புன்னகை காட்டி மயக்கும் மலர்முகமே வாராயோ...(அரவிந்த) சிரித்துச் சிரித்துப் பார்த்தபடி திருட்டுத் தனம் செய்யாதே உரலில்வெண்ணை தயிரெண்டு விஷமத்தனமும் செய்யாதே...(அரவிந்த)
அந்தப்பாட்டு இப்படிப் போகும்.
தெரிந்து கொள்ளணும் பெண்ணே என்ற சினிமாப் பாட்டின் மெட்டு. ( பேபிக்குப் பிடித்த பாட்டு இது.) இந்தப் பாட்டுக்கு ஹெட்மாஸ்டர் பெண் ஹேமா தான் கிருஷ்ணராக வேஷம். நான் ராதை... வேதமணி டீச்சரின் பெண் மல்லிகா லக்குமியாகவும், நான் சரஸ்வதியாகவும் ஒரு போட்டி டான்ஸ் ஆடினோம். செல்வம் முக்கியமா அல்லது , கல்வி முக்கியமா என்ற கருத்தில் அமைந்த பாட்டு. வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும் வைஜயந்திமாலாவுக்கும் வரும் போட்டி நடனம் போல...அந்தப் பாடலை ஒட்டியே பாடலை இயற்றினார் அக்கா.
...செல்வம் கல்வி இரண்டும் என்றும் ஒன்றாகுமோ? கல்விதானே என்றும் நின்றோங்குமே.... எண்ணி இன்றேனற் கல்விதனைப் படிப்பீர்! ஏதெமக் கீடென்று துள்ளியே குதிப்பீர்"...
இது போல் நிறைய stanzas போட்டு அந்தப் பாடல் அற்புதமாக இருக்கும். எனக்கு வெள்ளையில் காஸ்டியூமும் சரஸ்வதி என்பதால்...மேலும் வெள்ளை நிறப்பூக்கள், முத்தில் ஆன அணிகலன்கள்,,,எல்லோரும் பாராட்டிய நடனம் அது...
அந்த ஆண்டுவிழாவில் தான் ராஜாவும், மல்லிகாவின் தங்கை பாத்திமாவும் கையில் ஒரு புகைப்படம்...(நேருவும் காந்தியும் என்று நினைக்கிறேன்) வைத்துக் கொண்டு நிற்கணும்....பாலும் பழமும் கைகளில் ஏந்தி என் ராகத்தில் அன்பும் பண்பும் வாழ்வினில் ஏற்று...அருமைத் தலைவராய்த் தேசம் காத்து"....இப்படிப் போகும் அந்தப் பாட்டு.
கரூர் ராஜப்பாவின் பூணுலுக்கு நான்தான் டான்ஸ். தாயே யசோதா என்ற பாட்டு...டான்ஸ் எனக்கு அத்தனை பிடித்தமானதாக இருந்தது....இன்னொன்று எனது வெட்கமறியா வயதும் பருவமும்....டான்ஸ் ஆடு என்றால் எந்தத் தயக்கமும் இராது...உடனே ஆடிவிடுவேன். அதனாலேயே பத்மினியையும் வைஜயந்திமாலாவையும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று!
நமது அரு,வீதியில் இருந்த அலமிஆச்சி "டான்சுப் பாப்பா..டான்சுப் பாப்பா கோவங் கொள்ளாதே...உங்க அம்மா வரவே நேரஞ்செல்லும்..சண்டை போடாதே!" என்று தமாஷாகப் பாடிக்கொண்டே வருவார்.
நான் டான்ஸ் ஆடியதாலேயே என்னை அநேகம் பேருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று....அதன்பிறகு ஹைஸ்கூல் போனவுடன் ஆடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது....படிக்கணும் என்ற எண்ணம் மேலோங்கியது.
ஆனாலும் பள்ளி ஆண்டு விழாவின்போது பாரதியாரின் வெள்ளைக் கமலத்திலே பாடலுக்கு நான் ஆடும்படி ஆயிற்று. அந்தச் சமயம் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.... சிவப்புப் பாவாடையும், சிவப்புச் சட்டையும், வெள்ளை தாவணியும் நான் போட்டுக் கொள்ளணும் என்று டீச்சர் சொன்னார். அதுவும் ரிச்சாக அந்த உடை வேண்டும்...என்னிடம் அந்த மாதிரி ட்ரெஸ் கிடையாது என்றேன். உடனே டீச்சர் மற்ற மாணவிகளிடம் யாரிடம் அந்த மாதிரி பாவாடை சட்டை இருக்கு, தர முடியுமா என்று கேட்டார்....மறு நாளே சந்திரா என்ற பெண் பட்டுப் பாவாடையும் ரவிக்கையும் தாவணியும் கொண்டு வந்து தந்து விட்டாள்.
டீச்சர் என்னை அந்த ட்ரெஸ்ஸைப் போட்டுக் கொண்டு வரும்படி சொன்னார்...சரியாப் பொருந்தி இருக்கா என்று தெரியணும் என்று. நான் போட்டுக் கொண்டு வந்தேன்....உடனே கொல்லென்று மாணவிகளிடமிருந்து பெருத்த சிரிப்பு கிளம்பியது...நான் குழம்பிப் போனேன்...என்ன காரணம்? எங்கே தவறு? டீச்சரும்...."நல்ல பொண்ணு..பாவம். போய் சரியாகப் போட்டுக் கொள்ளும்படி யாராவது சென்று உதவுங்கள்" என்றார்....
வேறு ஒன்றுமில்லை. அந்த பிளவுஸ் பாக் பட்டன் கொண்டது....ஆனால் அதை முன்பின்னாகப் போட்டுக் கொண்டதில் தான் வேடிக்கை இருந்தது...அந்த அளவுக்கு நான் ignorant—ஆக இருந்திருக்கேன். (இந்த நிகழ்வு என் மனதில் தங்கிப் போனதாலோ என்னவோ, பின் நாட்களில் புடவை கட்டும்போது எனது பிளவுஸ் அத்தனையும் பாக்பட்டனாகவே தைக்கப்பட்டன!)
பள்ளி ஆண்டு விழா வந்தது...வேங்கையின் மைந்தன் என்ற கல்கியின் டிராமா போட்டபோது நான் ரோகணத்து இளவரசி ரோகிணியாக நடித்து (கடைசியில் இறந்து விடுவதுபோல் ) ராஜா சர் முத்தையா செட்டியாரிடமிருந்து வெள்ளிக் கோப்பை வாங்கினேன். அது சமயம் சுகுணாக்கா புதுவயலில் வேலை பார்த்து வந்தார். அம்மாவும் அக்காவும் வந்து பார்த்தார்கள்...அன்றைய தினம் நான் உணர்ச்சி பூர்வமாக நடித்ததைப் பார்த்து அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு "என் கண்ணே!" என்று அழுதார்......(இதை எழுத முடியாமல் இப்பவும் என் கண்ணில் நீர் நிறைகிறது).
அதன் பிறகு காலேஜில் மன்னவன் வந்தானடி பாடலுக்கு ஆடினேன். எப்பவும் என்னோடு கடுகடுவென்று இருக்கும் :. பிசிக்ஸ் மிஸ் விஜயலட்சுமி எனது அந்த நடனத்தைப் பார்த்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமுகமானார்....
இப்படியாகப் பாடலும் ஆடலும் நிறைந்த அந்த நாட்களை நினைக்கும்போது இப்போதும் மனது ஆனந்தக் கூத்தாடுகிறது.....
சிலை செய்யும் சிற்பி எப்படி ஒரு கல்லில் இருந்து வேண்டாதவற்றை நீக்கி, ஒரு உளியின் கூர்முனையால் அழகிய சிலையைக் கொனர்வாரோ, அப்படி அல்லவா நம்மைச் செதுக்கிச் செதுக்கி உண்டாகி இருக்கிறார்கள்! இன்று ஓரளவுக்குக் கலையும் ரசனையும் நமக்கு இருக்கிறதென்றால் அதற்கு நமது பெற்றோரும் சகோதரிகளும் அல்லவா காரணம்? அத்தனை பேருக்கும் வந்தனமும் நன்றியும் சொல்ல இந்த ஒரு ஜன்மம் போதுமா...தெரியவில்லை. பானுரவி/25th Nov 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi