நிறைவேறாத மருத்துவக் கனவு — ஒரு சிறுமியின் கனவுகள் குடும்பத்தின் நிலைமைகளுக்காய் அமைதியாய் விலகிய கதை.
இளம் வயதின் கரைகளில் நின்றபடி கண்ட கனவுகளும் கற்பனைகளும் இன்று தொலை தூரத்தின் கானலைப் போல மினுங்கிக் கொண்டிருக்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகிறது! ஆனால், மனது மட்டும் இசைத்தட்டின் முள்ளைப் போலத் திரும்பத் திரும்ப அந்த இளம்வயதின் வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டு இருக்கிறது....அப்படி என்றால், இளம்வயதின் கனவுகள் என்றுமே ஒரு தீராத மயக்கம் தானா?....அப்படித்தான் இருக்கும்....ஏனென்றால் அந்த வயதில் கண்ட கனவுகள் நிராசையாகி விட்டதால் ஏற்பட்ட தாக்கம் இன்னமும் அடி மனத்தில் சுட்டுக் கோலால் சுட்ட ஒரு தழும்பாகப் படிந்து கிடக்கிறதே....
எனக்கு இயல்பாகவே வரைதல் பிடிக்கும். பள்ளிக் கூடத்தில் சூரிய மண்டலத்தைத் தத்ரூபமாகக் கரும்பலகையில் சாக்பீஸால் வரைந்து சயின்ஸ் டீச்சரிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறேன். அது போல் அழகான கையெழுத்துக்கும் பரிசு வாங்கி இருக்கிறேன். அப்போது எலக்டிவ் என்று ஒரு சமாச்சாரம் உண்டு. பௌதிகம், கணக்கு, பயாலஜி, சுவாலாஜி, கெமிஸ்ட்ரி என்று எது நமக்கு விருப்பமோ அந்த சப்ஜெக்டை எடுத்துப் படிக்கலாம். எனக்கு பயாலஜி பிடித்திருந்தாலும் சுலபமாக அதில் மார்க் வராது என்று தோன்றவே கெமிஸ்ட்ரி எடுத்துப் படித்தேன். அதற்கு மறொரு காரணமும் இருந்தது...அந்தக் கெமிஸ்ட்ரி டீச்சர் மிகவும் அழகாக இருப்பார். பாலா என்ற அந்த டீச்சர் ஒரு ஜாடைக்கு வெண்ணிற ஆடை நிர்மலா மாதிரி இருப்பார்.
நான் எந்த வகுப்பிலும் முதல் வரிசை...முதல் ஆளாக உட்கார்ந்திருப்பேன். எல்லா டீச்சரும் என்னைத்தான் அவர்களோடு சென்று ரெகார்ட் நோட் புத்தகம் கொண்டு வரவும், இன்ன பிற சிறு சிறு வேலைகளுக்கும் கூப்பிடுவார்கள். மேலும் கூடவே டிராமா நடனம், பாட்டு என்று என்று வேறு நான் அமர்க்களப் படுத்திக் கொண்டிருப்பேன் என்பதால் டீச்சர்களிடையே நான் மிகவும் அறியப்பட்டவளாக இருந்தேன்....
எனது சிறு பிராயத்திலேயே டாக்டர்களின் மீது ஒரு தீராத மயக்கம் இருந்தது. டாக்டர் அனந்தநாராயணனின் கண்ணியமான தோற்றமும், பழகும் விதமும், கனிவான பேச்சும்....எனக்குள் ஒரு இனம்புரியாத ஆர்வத்தை ஏற்படுத்தியது. விஜயாக்காவிற்கு புவனேஸ்வரி பிறந்திருந்த சமயம்...அங்கு பணியாற்றிய டாக்டர் சற்குணம் எனது மனதை ரொம்பவே கவர்ந்தார். அவரது கொண்டையும் டீசண்டான புடவைகட்டும் என்னை வசீகரித்த ஒன்று. நானும் இந்திராணியும் அக்காவோடு போகும்போது, அந்த டாக்டரிடம் சென்று சும்மா ஏதேனும் உதார் விட்டுக் கொண்டிருப்போம்...சற்குணத்தின் சகோதரி ஐடர் மிகவும் அழகு.
அப்பா வீட்டில் பேசும் போது....உத்தியோகம் என்றால் பள்ளிக்கூட வாத்தியாருக்கும் மருத்துவர்களுக்கும் தான் நிறைய மரியாதை கிடைக்கும். இரண்டும் புனிதமான வேலைகள்....என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார். இதெல்லாம் எனது மனதில் ஒருவிதமான டாக்டர் கனவை வளர்த்து விட்டன என்பேன்.
வீட்டின் நிலைமை, பணத் தட்டுப்பாடு எல்லாம் எனக்குச் சரியாகப் புரியாத வயது. எனது சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் அப்பா நிறைவேற்றி வைத்து விடுவாரென்பதால் இந்தக் கனவும் ஒரு நாள் பலிதமாகும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவும் குடும்பத்தின் முதல் ஆளாகக் காலேஜில் என்னைச் சேர்த்து விட்டபோது அப்பா அம்மா இரண்டு பேருக்குமே அத்தனை பெருமை. அப்ளிகேஷனில் ஒட்டுவதற்காக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு எனக்கு வெள்ளையில் நீலப்பூக்கள் போட்ட தாவணியை சுகுணாக்கா வாங்கித் தந்தார். இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டி இருப்பேன். அப்பா, என்னுடைய அந்தப் புகைப்படம், விஜயாக்காவின் மற்றும் சாவித்ரிக்காவின் புகைப்படம் என்று நான்கு பாஸ்போர்ட் போட்டோக்களை ஒட்டி அப்பா பிரேம் செய்து வைத்தார்.
மருத்துவம் படிக்க வேண்டுமென்றால்...அதற்கு என்ன க்ரூப் எடுக்கணும் என்றெல்லாம் அங்குள்ளவர்களிடம் விசாரித்து அப்பா தான் அப்ளிகேஷனை எழுத உதவினார். பள்ளத்தூரின் அந்தப் பெண்கள் கல்லூரியின் பிரம்மாண்டம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. அத்தனை பெண்களும் ஆங்கிலத்தில் உரையாடியது என்னை கொஞ்சம் மிரட்டியது. கல்லூரி என்பது பள்ளியை விடவும் நிறைய விஷயங்களில் வித்தியாசமானது என்பதைத் தெரிந்து கொண்டேன். நான் தாக்குப் பிடிப்பேனா என்ற பயம் கூட ஏற்பட்டது....ஆனால் போகப்போகச் சரியாகி விட்டது. அதுவும் அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை ஆக இருந்த சரஸ்வதி ராமநாதனுக்கு என்னையும் எனது தமிழையும் ரொம்பவே பிடித்துப் போயிற்று!
தினமும் அப்பா 60 பைசா கொடுப்பார். அது பஸ்ஸில் சென்று வரக் கட்டணம். அது தவிரப் பத்துப் பைசா....ஏதேனும் வாங்கித் தின்ன! ஆனால் நான் தினமும் நடந்துதான் போனேன். ஆர்ட்ஸ் க்ரூப்பில் படித்த சாதுவான கமலா என்ற மலையாளப் பெண் எனக்கு ஒரு தோழி ஆனாள். அவளது வீடு மெயின் ரோட்டில் இருக்கும். பஸ் காசில் கடலை மிட்டாயும், கமர்க்கட்டும், உப்புக் கடலையும் வாங்கிக் கொண்டு விடுவேன். வீட்டை விட்டு சீக்கிரமாகவே கிளம்பி விடுவேன், வயிறு முட்டப் பழைய சாதம்...கையில் குழம்பு சாதமும் கறியும். அந்தக் கமலா வீட்டில் மசாலா டீ எப்போதாவது தருவார்கள். நம் வீட்டில் சாதா டீ தானே இருக்கு.... இது மாதிரி அம்மா என் போடுவதில்லை என்று நினைச்சுப்பேன்.
தினமும் அந்த ரோட்டில் நடக்கும் போது ஆஞ்சநேயா பஸ் ட்ரான்ஸ்போர்ட் என்று ஒரு வாகனம் (ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு போவது போல் படம் வரையப் பட்டிருக்கும்) சர்ரென்று போகும். நானும் கமலாவும் உடனே ரோடு என்றும் பார்க்காமல் கீழே விழுந்து நமஸ்கரித்துக் கொள்ளுவோம். எனது அனுமார் பக்தி அப்போது ஆரம்பித்தது தான்...கில்லாடி அனுமன் என்னோட முதல் பாய் பிரான்ட் என்றுதான் சொல்லணும்!
ஆனால் கல்லூரிப் படிப்புக்கு ரொம்பவே மெனக்கெட வேண்டி இருந்தது. நிறைய வரையணும்....நிறையப் படிக்கணும். எனது விளையாட்டு புத்தியை மெதுவாக ஓரம் கட்டினேன். ஆனாலும் அது சமயம் வீட்டில் நிதி நிலைமை அத்தனை செழிப்பாக இல்லை...அப்பாவின் சவுத் இந்தியா கார்ப்பரேஷன்/மதுரை வேலை போய் விட்டது. அப்பாவுக்கு அறுபது வயதானதால் ரிட்டயர்மென்ட் என்று காரணம் சொல்லப்பட்டது. அதனால் வீரப்ப வாண்டையார்/தஞ்சாவூர் என்பவரைப் போய் அப்பா பார்த்துவிட்டு வந்தார். அந்த வாண்டையாரும் நிறைய நம்பிக்கை கொடுத்திருந்தார். அப்பா ரொம்பவும் நம்பிக் கொண்டிருந்தார். ஏனென்றால் சீரியஸாக சுகுணாக்காவுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...சாவித்திரி அக்கா திருச்சிக்கு ஏற்கனவே போயாச்சு. ரமணியும் திருச்சியில்....
தஞ்சாவூருக்குப் போகும்படி இருக்குமென்றும், அங்குள்ள மெடிக்கல் காலேஜில் எனது படிப்புத் தொடருமென்றும், அருமையான வீடு நமக்குத் தரப்படுமென்றும் அப்பாவுக்கு அந்த வாண்டையார் உறுதி கொடுத்திருந்தார். ஆனால் என்ன நடந்தது? ஏனென்று சரியாகத் தெரியவில்லை...அந்த வாய்ப்பு அமையவில்லை. பெருத்த ஏமாற்றம். எப்படியும் அப்பா ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டுமென்கிற கட்டாயம். வீட்டு நிர்வாகத்துக்குப் பணம் என்பது அத்தனை அத்யாவசியமாக இருந்தது...
அடுத்த கட்டம் என்ன செய்யப் போகிறோம் என்பது பெரிய கேள்விக் குறியாக எழுந்தது. சாவித்திரி அக்கா எல்லோரையும் திருச்சிக்கு வரும்படி லெட்டர் போட்டார். விஜயாக்கா அத்திம்பேரும் திருச்சிக்கு வந்தால் குடும்ப முன்னேற்றத்துக்கு நிறைய வழிவகை பிறக்கும் என்று அப்பாவுக்கு உத்தரவாதம் தந்தனர். கானாடுகாத்தான் வீட்டில் முக்கிய சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவைகளை அங்கேயே போட்டு விட்டுத் திருச்சிக்குப் பயணமானது இன்னமும் கண் முன் தெரிகிறது.
அந்த நாளில் சந்தோஷமும் இல்லாமல், வருத்தமும் இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய குழப்பமான சிந்தனையோடு நமது வீட்டைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடி சென்றதும், போகும்போது சுந்தரமூர்த்திப் பிள்ளையாரை வணங்கிவிட்டு செட்டிநாடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்ததும் இப்போது போல் இருக்கு.....
விஜயாக்கா வீட்டில் சிறிது நாட்கள் இருந்து கொண்டு பிறகு மலைக்கோட்டை வீட்டுக்குக் குடி போனோம். நான் மனதளவில் ரொம்பவே குழம்பிப் போய்க் கிடந்தேன். கல்லூரிக்குப் போய் இனி படிப்பைத் தொடர்வது இயலாது எனத் தெரிந்தபோது மனசுக்குள் எனது டாக்டர் கனவு, சுக்கு நூராக நொறுங்கிப் போயிருந்தது....பட்டப்படிப்பு கூடத் தொடர வழியில்லை என்ற நிதர்சனம் என்னைச் சுட்டுப் பொசுக்கியது.....எத்தனை நம்பிக்கையோடு இருந்தேன். எனது படிப்பு முடிகிறதா? ஒரு ஹான்ட்பாக்கைத் தூக்கிக் கொண்டு நானும் வேலைக்குப் போகும்படியான நிலைமை வரப் போகிறதா? கடவுளே...
உண்மையிலேயே பட்டாம்பூச்சி போல அதுவரை இருந்த நான் மிகவும் வருத்தமுற்றது அந்தச் சமயத்தில் தான்...விஜயாக்கா சொன்னார்.."உனக்குத் தமிழ் நன்னராக வருகிறது...பேசாமல் பிரைவேட்டாகத் தமிழைப் படித்து ஒரு வித்வானாகவோ, பண்டிட்டாகவோ கூட ஆகலாம்." அந்த ஐடியாவே சுத்தமாகப் பிடிக்கவில்லை...வீட்டில் ஏற்கனவே மூன்று டீச்சர்கள்...
நிறைய அழுது அழுது கண்கள் சிவந்த சமயங்களில் விஜயாக்கா அத்திம்பேர் என்னை ரொம்பவே சமாதானப் படுத்தினார். "இதோ பார் பானு! இப்போதைக்கு உனக்கு ஏதேனும் வேலைக்குப் போக ஏத்தார்போல ஏதாவது செய்யணும்...டைப் ரைட்டிங் சேர்த்து விடறேன்..." என்ற போது அதை ஏற்க மனசு முரண்டு செய்தது...
சாவித்திரிக்கா ஆபீசில் வேலை செய்த கம்பரசம்பேட்டை ஐயர் என்பவர்..."இதோ பாரு....டைப்ரைட்டிங், ஷார்ட்ஹான்ட் படிச்சா உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்...கவலையே படாதே..." என்று சொல்லித் தைர்யம் கொடுத்தார். போக ஆரம்பித்தேன்...
இதற்கிடையே யார் மூலமோ சீதாலக்ஷ்மிராமசாமி காலேஜில் ஒரு வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு போகும்படி ஆயிற்று. அப்போதுதான் திருச்சிக்கு வந்த புதிது..
.(சுகுணாக்காவுக்கு வாளாடி வரன் நிச்சயமாகிப் பேசிக் கொண்டிருக்கார்கள்). அந்தக் காலேஜுக்குப் போனால் காமாட்சி என்கிற பிரின்சிபால் எனக்கு என்ன வேலை கொடுத்தார் தெரியுமா? காலேஜ் காம்பவுண்ட்டுக்குள் இருந்த அவரது வீட்டில் அவரது புடைவையை மடித்து வைக்கவும்...அவருக்கு வரும் கடிதங்களை அரேஞ்ச் பண்ணவும்,....எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது, வீட்டிலேயே துணி எல்லாம் நம்மாத்தில் பேபிதான் மடிச்சு வைப்பா. எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை...சொல்லாமல் கொள்ளாமல் லஞ்ச பிரேக்கில் வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். என்னை யாரோ அவமானப் படுத்தியது போல் உணர்ந்தேன்...
அம்மாவிடம் சொல்லி அழுதேன். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் நான் போக மாட்டேன் என்றேன். அம்மாவும்....."போவேண்டாம்...இதென்ன வேலை? காலேஜுக்குனு கூப்பிட்டாளேனு பார்த்தேன்....விட்டு தள்ளு" என்றார். அன்றைய தினம் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அந்தக் காலேஜ் பியுன் வந்து அம்மாவிடம் கேட்டான்...."ஏம்மா? மாசம் சம்பளமா எழுபது ரூபா தரேன்னு சொல்றாங்க...இந்தப் புள்ள சொல்லாம வந்துடுச்சு. வரச் சொல்லுங்கம்மா" என்ற போது அம்மா கத்திப் பேசினார்...."அட போப்பா... உங்க காலேஜு அம்மாவோட புடைவை மடிக்கிறதுக்கெல்லாம் என் பொண்ணு வர மாட்டா. போய்ச் சொல்லு".... அம்மாவின் கத்தலில் அவன் மாயமாகி விட்டான்....
அதன் பின்னர் நான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டேன். கல்லூரிப் பட்டம் வாங்காமலேயே எனது தகுதியை எந்த விதத்திலாவது சமன் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு வைராக்கியம் செய்து கொண்டேன்...சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் ஆங்கில டைப் ரைட்டிங்கும், தமிழ் டைப் ரைட்டிங்கும் கற்றுக் கொண்டேன்.
அத்தோடு பிட்மேன் ஷார்ட்ஹாண்ட் கற்றுக்கவும் எனக்கு ரொம்பவும் விருப்பமாக இருந்தது. நிமிஷத்துக்கு என்பது வார்த்தைகள் என்பது லோயர். நிமிஷத்துக்கு நூற்று இருபது வார்த்தைகள் எழுதுவது என்பது ஹையர். யாரும் ஹையர் எழுத முனையவில்லை. ஆனால் நான் ஹையர் எழுதப் பயிற்சி மேற்கொண்டேன். கிருத்திவாச அத்திம்பேர்தான் டிக்டேஷன்...வாட்சை வைத்துக் கொண்டு ஸ்பீடை கண்காணிப்பார். ஆங்கிலப் பத்திரிக்கைகளைக் கொண்டு வந்து கொடுத்து எனக்கு ஆங்கிலத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
அந்த இன்ஸ்டிட்யூட்டில் படித்த சாவித்திரி (என்னை விட சீனியர்....பின்னாளில் டெல்லி தூர்தர்ஷனில் நியூஸ் ரீடராகப் போய் விட்டாள்) எனக்கு ரொம்பவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தாள். அவளது தாயார் என்னோடு அன்பாகப் பேசுவார்.
இப்போது ஆண்டார் தெரு முனைப் பிள்ளையார் இருக்கே...அந்த சந்தில்தான் அவளது வீடு. அவளது தந்தை சேதுராம அய்யர் தினமலர் பேப்பரின் சீனியர் கரஸ்பாண்டன்ட். இந்திராகாந்தியின் ஒரிஜினல் கையெழுத்துடன் கூடிய ஒரு புகைப் படத்தைக் கொடுத்தார். பெண்கள் இந்திராகாந்தி போல் தைர்யமா இருக்கணும். சாவித்திரி அப்படித்தான்...என்று சொல்லி என்னை மிகவும் ஊக்கப் படுத்தியவர் அவர். என்னை ஹிந்தி கற்றுக் கொள்ளும்படி ஊக்கப்படுத்தினார்.
மாதம் மூன்று ரூபாய் ஹிந்தி படிப்பதற்குக் கட்டணம், திருச்சியின் மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் மேல் மாடியில் ஒரு ராயர் வாத்தியார் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால் விஜயாக்கா முன் வந்து..இதோ பாரு பிராம்மிக், மத்திமா ரெண்டும் நான் சொல்லித் தரேன். விஷாரத்துக்கு மட்டும் அங்கே போய் கத்துக்கோ என்றார்.
இதற்கிடையே வேலைக்குப் போவதால் கிடைக்கும் அனுபவம் பெரிய கம்பெனிகளுக்கு விண்ணப்பிக்கும்போது அனுகூலமாக இருக்கும் என்று அப்பாவும் அக்காவும் என்னைக் கன்வின்ஸ் செய்தார்கள். போகும் பாதை இனி இப்படித்தான் என்று மெள்ளப் புரிந்தது....
MPSC என்று ஒரு தேர்வு இருக்கும். அதை எழுதுவதற்கு ஜெனரல் நாலட்ஜ் வேணும் என்பதால் அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை சாவித்ரிக்காவின் கம்பரசம்பேட்டை ஐயர் கொண்டு வந்து தந்தார். நிறைய மாடல் கேள்வித் தாள்களும் கொணர்ந்து தருவார். எனது பிரெண்ட் சாவித்ரி என்னை UPSC எழுதவும் ஊக்கப்படுத்தினாள். இதில் தேர்ச்சி அடைந்தால் மாநில/மத்திய அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது...
நாம் கண்ட கனவு நனவாகாத போது அந்த வேதனையை எதிர் கொள்ளும் மன நெருக்கடியை வார்த்தையால் பகிர முடியாது.....அந்த இளமைக் கனவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் சொட்டி கொண்டிருக்கும் மழைத் துளிகளைப் போல இதயத்தை நனைத்துக் கொண்டே இருப்பதென்னவோ உண்மை...
ஒரு கால கட்டத்தில், அந்த ஆரம்ப காலத்து ஏமாற்றமானது, பின்னாளில் வரும் எல்லாவித அவமானங்களையும், மனக் கஷ்டங்களையும், தாங்கிக் கொள்ளும்படியான ஒரு சக்தியைக் கொடுக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.....எதிர்பார்ப்பில் விழுந்த முதல் அடியின் வலி கொஞ்சம் வலிக்கும்தான்...ஆனால் இனி வாழ்வில் இது போல் பலது நடக்கும்...அதற்கு நீ தயாராக இரு...என்றல்லவா எல்லோரும் அச்சுறுத்தப்படுகிறோம்?
இப்போது நினைத்துப் பார்க்கையில் பால்யம் என்பது சோப்பின் நுரைகளைப் போல நூற்றுக் கணக்கான கனவுக் குமிழ்கள் மிதந்து செல்லும் ஒரு ஓடை போலத் தெரிகிறது...நுரை எப்போதுமே ஒரு அதிசயம்...இல்லையா? அவை நீரில் பூக்கும் பூக்கள் என்றே தோன்றுகிறது! நுரைப்பூக்கள் தண்ணீரில் தோன்றி மறு கணமே கரைந்து விடுவது போலவே நமது கனவுப்பூக்களும் கரைந்து விடுகின்றனவே!
எதுவோ எப்படியோ...கடவுள் பலே கெட்டிக்காரன். I had many dreams and desires. There was a period when I would write down my dreams and the desires I wanted fulfilled.When I could not achieve my dreams and desires, anger & disappointment was all I felt. Much later, I realised that my life is not mine — and that I am not the captain of my own life. Right? I may have paper & pen in my hands... but the entire and complete stationery set is in God's hands. Haha...Just because I could not become a Doctor HE truly blessed our family by granting with three Doctors!... I took it in this way!! வாழ்க்கை சுவாரஸ்யமானது தான்....இல்லையா? பானுரவி Oct 28, 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi