ஒரு வீட்டைப் பிணைத்திருந்த சடங்குகள் — வெள்ளிக்கிழமை வழிபாடு, திதி, கரூர் பிரான்மலையிலிருந்து விருந்தாளிகள் — குடும்பத்தில் நடந்த ஒரு விதவைச் சிறுமியின் சோகக் கதை.
ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையன்று பிள்ளையாருக்கு உண்டஉருளிக் கொழுக்கட்டையும், மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று மாவிளக்கு ஏற்றி ஒரு சுமங்கலிக்கு வெற்றிலைபாக்கு வைத்துக் கொடுப்பதும் அம்மா செய்து வந்த வழிபாடுகளில் ஒன்று. அதே போல் தை மாதமும் முதல் & மூன்றாம் வெள்ளிக் கிழமை வழிபடுவது நம்மாத்து வழக்கம். நமது வீட்டில் ஒரு பெண் தெய்வம் இருப்பதாக நம்பியதாலும், அம்மாவுக்கும் முன்பாக அப்பாவின் துணைவியாக வந்து கன்யாப் பருவத்திலேயே சுமங்கலியாகப் போன (மீனாட்சி) பெரியம்மாவை நினைந்தும் அம்மா இது போல் தெய்வ வழிபாடு செய்து குழந்தைகளின் நலம் வேண்டுவது வழக்கம். இது தவிரக் காவேரியில் குளித்து விட்டு அந்த ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் யாருக்காவது சுமங்கலிக்கு வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை என்று அம்மா வைத்துக் கொடுத்து விடுவார்.... கன்யாப் பெண்ணென்று எனக்கும் ஏதானும் கிடைத்து விடும்!
பாட்டி, தாத்தா திவசம் கூட நம்மாத்தில் கல்யாணம் போலத்தான் நடக்கும். ஒவ்வொரு திவசத்திற்கும், தொண்டிப் பெரியப்பாவின் குடும்பம் தவறாது ஆஜராகிவிடும்.. யோகம் பெரியம்மா முதல்நாளே வந்துவிடுவார். மதியச் சாப்பாட்டுக்கு, ராஜாமணி அண்ணா, சங்கரன், நடராஜன், கிருஷ்ணா, யோகம் பெரியம்மா, அப்புறம் தொண்டிப் பெரியப்பா...நம் வீட்டு மனுஷா என்று கிட்டத்தட்ட சிரார்த்தத்துக்கு வரும் பிராமணாளுக்கும் சேர்த்து இருபது பேருக்குச் சமையல் நடக்கும். புளி இல்லாமல், மிளக சீரகம் சேர்த்துப் பண்ணும் அந்தத் திவசச் சமையலில் நம் வீட்டு வழக்கமாகத் தேங்காய் சேர்ப்பது உண்டு. எனவே ரொம்பவே ருசியாக இருக்கும். முதல் நாளே கறிகாய் நறுக்கி வைத்து விடுவார்கள். பலாக்காய், பாகற்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, வாழைக்காய் என்றும், மாங்காய்ப் பச்சடியும், இஞ்சித் துவையலும், பசந்தயிரும், பயத்த உருண்டை, எள்ளுருண்டை, அதிரசம், உளுந்து வடை, வெல்லம் போட்ட கோதுமை அல்வா (சர்க்கரை கூடாது) என்று ஏகத்துக்குப் பண்ணுவார்கள். பழங்கள் வேறு,,,புத்துருக்கு நெய் வேறு மணத்துக் கொண்டிருக்கும். எல்லாம் கனமான ஈயம் பூசப்பட்ட பெரிய பாத்திரங்களில், தாம்பாளத்தில் என்று வைக்கப் பட்டிருக்கும்!
ஒன்பது கஜத்தை ஒட்டப் பிழிந்து ஒற்றையாக உலர்த்தி மடியாக உடுத்திக் கொண்டு ரொம்பவும் ஆச்சாரமாக அந்தச் சமையல் காரியம் நடக்கும். இலையில் தொன்னை செய்தும், இலைகளை நறுக்கி அலம்பி வைத்தும், திவசக் கிண்ணங்கள், தாம்பாளங்கள், தர்ப்பை போன்றவற்றைச் சரி பார்த்துக் கொண்டும் ஐம்மென்ற பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு அப்பா காத்துப்பார். நேமத்தான்பட்டியிலிருந்து, வைத்து சாஸ்திரிகள் வருவார். வெற்றிலை போட்டுச் சிவந்த வாய், கடுக்கன், சற்றே வீங்கிய கால்கள், கருத்த புஷ்டியான உடம்பு என்று டிபிக்கல் சாஸ்திரிகள். அப்பாவுக்கே திவச மந்திரமெல்லாம் மனனம் தான்....சிலசமயம் சாஸ்திரிகள் மந்திரத்தைத் தவிர்த்து விட்டால், அவ்வளவுதான்...அப்பா பயங்கரமாகச் சப்தம் போடுவார்...அப்புறம் அம்மா வந்து ஒருமாதிரி சமாளிக்கணும். அது போல் சாஸ்திரிகளுக்குக் கொஞ்சம் தாராளமாக தட்சிணை கொடுக்கணும்னு அம்மாக்கு இருக்கும்...ஆனால் அப்பா அதில் எல்லாம் ரொம்பக் கரெக்ட்...கறார் பேர்வழி!.
அம்மாவின் கை தாராளம். எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம்தான்...திவசத்தின் போது பிராமணர்களுக்குப் பரிமாறும் போது ஏகத்துக்கு நெய்யும், பக்ஷணமும், அம்மா தாராளமாகப் போடும்போது, நான் மலைத்துப் போய்...."அடேங்கப்பா! இந்த ரெண்டு மாமாவும் எவ்வளவு சாப்பிடறானு அம்மாவிடம் சொல்லி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன், இன்றும் நான் எனது மாமியார்/மாமனார் திவசத்தின் போது பிராமணர்களுக்குப் பரிமாறும் போது அம்மாவின் அந்த வசவு நெஞ்சுக்குள் கிசுகிசுக்கும். அப்போது ஒரு சின்ன சிலிர்ப்பு ஏற்படும்!
இப்படியாகத் திவசம் முடிந்தாலும், மிஞ்சிய கறி, பொரிச்ச கூட்டு, ரசம் எல்லாம் சேர்த்து எரிச்ச குழம்புன்னு ஒண்ணு பண்ணுவா. மறுநாள் தயிர் சாத்துக்கு அது தேவாமிர்தமா இருக்கும். அதே போல் தொண்டிப் பெரியப்பா வீட்டு திவசத்துக்கு நாமும் போவது உண்டு, மிகவும் அமைதியான யோகம் பெரியம்மாவும், அன்பான தொண்டிப் பெரியப்பாவும் நம் பெற்றோர்களுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்தார்கள்.
அப்பாவின் களின்ஸ்களில் சங்கரப் பெரியப்பாவும், கிட்டாப் பெரியம்மாவும் நம்மோடு ஆசையாக இருப்பார்கள். நம் அம்மாவின் மீது அன்பும், அப்பாவிடம் அலாதிப் பிரியமும் கொண்டவர்கள். சாமிநாதன், பொன்னம்மா, வசந்தா, கணபதி, இன்னொரு பையன்...இப்படியாக அவர்கள் குடும்பம். ரொம்பவும் பாட்டு ஞானம் உள்ளவர்கள். பொன்னம்மாவின் எப்படிப்பாடினரோ பாட்டு அப்படியே டிகே பட்டம்மா மாதிரி கணீரென்று இருக்கும். சாமி அண்ணாவின் மனைவி வசந்தா மன்னி பாடிய "பராசக்தி ஜனனி" இன்னமும் காதிலேயே இருக்கு.... அது தவிர குன்னக்குடி ராமாம்பா சித்தியும், பள்ளத்தூர் சபா சித்தப்பாவும் சுந்தரி சித்தியும் அவ்வப்போது வந்து போவார்கள். அப்புறம் கோட்டையூரில் மாணிக்க மாமா இருந்தார். யோகம் பெரியம்மாவின் சகோதரர்...அவர்களின் பெண்களில் ஜெயம், காவேரி இருவரும் முறையே ராஜாமணி அண்ணாவையும், சங்கரனையும் மணந்து கொண்டவர்கள். ஞானி, கீதா இருவரும் இந்திராணி, ரமணி செட்...
கர்ணன் வந்த சமயம்...அத்தனை பாடல்களையும் ராஜாமணி அண்ணாவும், அக்காவும், சங்கரனும், சாவித்ரிக்காவுமாக அலசி ஆராய்ந்த ஒரு மாலை நேரம் கூட நிழலாகக் காட்சி தருகிறது...கண்ணுக்குக் குலமேது பாடலை அத்தனை விலாவாரியாக டிஸ்கஸ் செய்தார்கள்... நம் அம்மாவைச் சொல்லணும். மகராஜி...எத்தனை பேர் வந்தாலும் எதிர் கொண்டழைத்து, உபசாரம் செய்து, வயிறாரப் பசியாற்றி...அன்னபூரணி அவதாரமாகத் தான் நமது அருமை அம்மா தெரிகிறார்.
சம்பந்தப் பெரியப்பா என்று ஒருவர். தென்கரை கிராமம் என்று நினைவு. அவர் சிலசமயம் வரும்போதே புளியஞ்சாதம் (பட்டை சாதம் மாதிரி இருக்கும்) கொண்டு வருவார்.. நானும் ராஜாவும் அவர் அத ஒரேயடியாகப் பிசைந்து சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்போம்...அம்மா எங்களை விரட்டி அடிப்பாள்...ஓடிவிடுவோம். .அம்மா பண்ணும் ரசத்தை அப்படி நொட்டை விட்டுக் கொண்டு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்.
விருந்தோம்பலையும், சொந்தங்களை விரிசல் விழாமல் கட்டிக் காப்பதையும் அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பெரிய கடமையாகவே கருதி முறையோடு வாழ்ந்து காட்டியுள்ளனர். கோடை விடுமுறை நாட்களில் சித்தப்பா, பெரியப்பா குடும்பத்துக் குழந்தைகள் நமது வீட்டுக்கு வருவதும், அது போல நாமும் சென்று வருவதும் இது போன்ற உறவு முறை நசித்துப் போகாமல் இருக்க உதவியது என்பேன். கையிருப்பு குறைந்திருந்தாலும் விசாலமான மனதும், பெருந்தன்மையான குணமும் படைத்தவர்களாக நமது பெற்றோர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதே சரி.
நிறையத் தடவைகள் கரூரிலிருந்து ராஜப்பா, வீரமணியும், பிரான்மலையிலிருந்து சித்தி குழந்தைகளும் விடுமுறை சமயங்களில் வருவார்கள். அதுவும் கரூர் சித்தி, சித்தப்பாவின் விருந்துபசாரம் ரொம்பவும் பாராட்டும் வகையில் இருந்தது...கூடை கூடையாகத்தான் சித்தப்பா பழங்கள் வாங்குவார். பூவும் அப்படித்தான்...கூடை தான்...முழும்...உழக்கு என்பதெல்லாம் கிடையாது....அதே போல் அமிர்தச் சித்தியின் சமையல் அப்படி தூப்பராக இருக்கும். எட்டுருக்கு மணக்கும். எல்லோரும் சாப்பாட்டுப் பிரியர்கள்...அத்தனை பெரிய சாம்பார், பெரிய வெங்கலப் பானையும் நித்தியப்படி சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். இட்டிலி சைஸ் உள்ளங்கையை விடப் பெரியதாக இருக்கும்...அது போல் உளுந்து வடையும் மொறுமொறுன்னு பெரியதாக இருக்கும். வாழைக்காய் பஜ்ஜியும், ஈரோட்டு கத்தரிக்காய் பஜ்ஜியும் செவசெவன்னு மின்னிக்கொண்டு பெரிது பெரிதாக மினுக்கிக் கொண்டிருக்கும். அதுக்குக் கெட்டிக் சட்னி வேறு தோதாகப் பண்ணுவார்கள். காபி எல்லாம் பெரிய போணியில் தான். ராத்திரி எல்லோருக்கும் பசும்பால்...ராஜப்பா அருமையாகக் கதையும், புதிரும் சொல்லுவான்...
அமிர்தச் சித்திக்கு நம் அம்மாவை அப்படிப் பிடிக்கும். கரூர் சித்தப்பாவும் "மதனி மதனி" என்று மரியாதையுடன் இருந்தவர். ஏனெனில், நம் அம்மா கல்யாணமாகி வந்த புதிதில் சித்தப்பா உடம்பில் தேரை (தவலை மாதிரி இருக்கும்...விழுந்தால் சொரிசொரியாகத் தோல் இருந்து தேவாங்கு மாதிரி ஆகி விடுவோம்)ன் விழுந்து ரொம்பவும் உடம்பு படுத்துமாம்...அத்தோடு ஒரு இடத்திலும் வேலைக்கு வேறு ஒழுங்காகப் போக மாட்டாராம். நமது பாட்டியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளுவாராம். அம்மா அப்போதெல்லாம் பரிவோடு இருந்திருக்கார். ஆனால் நம் அப்பா தான் ஆலாஸ்யம் ஆலாஸ்யம் என்று ரொம்பவும் பாசமாக இருந்து ராஜா வீட்டில் சொல்லிக் கரூரில் வேலை பார்த்து வைத்தவர். அம்மா அக்கறையோடு கவனித்துக் கொண்டதால் சித்தப்பாவின் உடம்பு நாளாவட்டத்தில் சரியானது என்பதே உண்மை! அது போல் நாம் சொற்ப சமயங்களில் தான் அம்மாவின் பிறந்த வீடான நங்கவரத்துக்குப் போயிருக்கோம். அத்தனை செழுமையான வீடல்லை...அம்மாவின் சுப்புலட்சுமிப் பாட்டியை ரொம்பவும் லேசாகவே நினைவிருக்கு...பாகீரதிப் பெரியம்மா மிகவும் தைரியசாலி. (ரும் சாவித்ரி அக்கா மாதிரி), நிலங்களைக் குத்தகை விடுவதும், பணம் வசூல் செய்யப் போவதுமாக வாழ்வதாரம்...எப்போதும் கட்டுப்பாடும், கடுகடுப்பும், விதிமுறைகளுமாகவே காணப் படுவார். தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவது மூழ்கடித்துக் கொண்டு விடுகிறோமோ என்று தோன்றுகிறது...பெரும்பான்மைக் குடும்பான்மைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது....நமது சாவித்ரிக்காவின் நிலையும் கூட அப்படித்தான் போய் விட்டது...மனப் பிராந்தியும், கற்பனையும், விசித்திரமான எண்ணங்களும் அவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விடுகின்றன என்பதே கசப்பான உண்மை! இல்லையா?
..இந்தப் பெரியம்மாவின் கதை யாருக்கும் வரக்கூடாது....ஐந்து வயதிலேயே தன்னை விடப் பதினேழு வயது பெரிய பையனுக்குப் பால்ய விவாஹம் செய்து கொடுத்து...பெரியம்மா பெரியவள் ஆகும்வரை, அந்தக் கால வழக்கப்படி பெற்றோர்களுடன் இருந்த சமயம்.... அந்தப் பையன் திடுமென்று இறந்து போனதாகச் செய்தி கிடைத்ததும், அந்தக்கால வழக்கப்படி, பெரியம்மாவுக்குத் தலையை மழித்து, வெள்ளைப் புடவை கொடுத்து.... கடவுளே! சிறு பெண் குழந்தை...வண்ணக் கனவுகள் இல்லாமல், கற்பனை இல்லாமல் எல்லாவற்றையும் முளைக்கும் போதே முறித்துப் போட்டு, கொடூரமாகவும், அவலமாகவும், அமங்கலமாகவும் எப்படி இவர்களால் இப்படி அநீதி செய்ய முடிந்தது?
அந்தப் பெண் குழந்தை செய்த குற்றம் தான் என்ன? ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் வந்து பிறந்ததா? நியாய உணர்வுகள் எப்படி அற்றுப் போய் குடும்பத் தலைமை இருந்தது? ஊர் வாய்க்குப் பயந்தும் அவமானம் என்று மறுகியும் அல்லவா இருந்திருக்கிறார்கள்? அந்தக் கால நியதி, சிந்திக்காத செயல்முறை, படிப்பறிவில்லாத ஆளுமை, குடும்பத்தின் வறுமை...இதில் பலியானது பெண் குழந்தைகள் மட்டும் தான்..நமது கலாச்சாரக் கருத்துக்களில் பாதி, பெண்களை எப்படி நடத்துவது என்பதற்கான அடக்குமுறை குறிப்புகளே! இது இன்று வரையில் பலரால், பெரும்பான்மையினரால் பின்பற்றப்படும் ஒரு நிதர்சனமான உண்மை என்பதை மட்டும் யாரும் மறுப்பதற்கு இல்லை...
நம் அம்மாவுக்குப் பெரியம்மா மீது வாஞ்சை அதிகம். இராமலிங்க சுவாமி மாதிரி வெள்ளையைக் கட்டிண்டு....ஒரு சுகமும் அறியாதவள் என்று ரொம்பவே இரக்கமும் அன்பும் காட்டுவார். நம் அப்பாவும் பெரியம்மா நம் வீட்டுக்கு வந்து போகும் சமயங்களில் மிகவும் அனுசரணையாக இருப்பார். ஆனாலும் இந்தப் பெரியம்மாவுக்கு ராதைச் சித்தி மீதுதான் ஒரு பிடி ஜாஸ்தி அன்பும் கரிசனமும் இருக்கும்...சித்தி குழந்தைகளுக்குத் தான் நிறைய அங்கீகாரம் கிடைக்கும்.. கொஞ்சம் பாரபட்சமாக நம்மை நடத்தினாலும் நம் அம்மா அப்பா அவற்றைப் பெரிதாக நினைத்தது இல்லை.. விஜயம், விஜயம் என்று பின்னாட்களில் நமது விஜயாக்காவிடம் வந்து இருந்து விட்டுப் போவாள். அப்படித் தான் பெரியம்மாவுக்கு காடராக்ட்...
ஆப்பரேஷன் செய்து வீட்டில் வைத்துக் கொண்டு சரியானதும் நங்கவரத்தில் கொண்டு போய் விட்டு வந்தாள் விஜயாக்கா. இந்தப் பெரியம்மா ராஜாவை ஆண்டப்பன் (அகண்டேச்வரர் சுவாமிநங்கவரம் கோவில்) என்றும், என்னைக் கமால் (காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் மன்னபின் நான் பிறந்ததால்) என்றும் கூப்பிடுவார். நங்கவரம் போகும் நாட்களில், ஒரு வெள்ளிக் கிண்ணம் இருக்கும்...அதில் ரசம் விட்டுப் பிசைந்து போடுவார். பண்ணையார் வீட்டுத் தயிரும் மோரும் வாசனையாக இருக்கும். வாசல் திண்ணையில் பெரிய நெல்குதிர் இருக்கும். ஈயக்குண்டான் ஆற்றில் குளித்து விட்டு நாம் வந்தால் சுடச்சுட சாப்பாடு.. மின்சாரம் இல்லாத அம்மாவின் பால்ய காலத்துப் பிறந்த வீடு பல சரித்திரங்களை உள்ளடக்கியதாகவே தெரிகிறது... .எதிர் வீடு தான் இந்திரா மன்னி வீடு. நம் அம்மாவின் பெரியம்மா மாட்டுப்பெண்....பணக்கார வீடு. செல்வச் செழிப்பும், வளமையும், நகையும், பட்டும்....வெள்ளியும் தங்கமும் சர்வ சாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள். இந்திரா மன்னி இடுப்பு நிறையப் பட்டும் கழுத்து நிறைய அட்டிகை காசுமாலையும் போட்டுக்கொண்டு, சிரித்த முகமாக இருப்பாள். (ஆனால் வைத்தியநாதன் மாமா ரொம்பவே பவிஷு காட்டுபவர்) இந்திரா மன்னி பாவம்...சாது. ரொம்ப வெகுளி...எல்லாவற்றையும் வாரி வாரிக் கொடுத்துப் பின்னாட்களில் சொந்தங்களாலேயே ஏமாற்றப்பட்டவர். இந்த மன்னியின் தங்கைதான் எனது மாமியாரின் தம்பி மனைவி...ரவியின் சொந்த மாமாவின் மனைவி!..ஹாஹா! இது எப்படி இருக்கு? பெரியம்மா அண்டை அசல் வீடுகளில் முறுக்குச் சுற்றியும், அப்பளம் இட்டுக் கொடுத்தும் வாழ்ந்து வந்தார். பண்ணையாரத்து ராமமூர்த்தி வீட்டில் நாள் கிழமை என்றால் பெரியம்மாவின் சமையல் தான் இருக்கும்... தனக்கு ஆதரவாக ராதைச் சித்தியின் பெண் ராகினியை வேறு வளர்த்து வந்தார். ரொம்பவும் ஆச்சாரம்...ராகினியும் பெரியம்மாவுக்கு ஏற்றார் போல இருந்து வளர்ந்து வந்தவள்...நிறைய மடி, பூஜை, என்று அந்த கிராமத்துப் பெரியம்மாவின் வாழ்க்கை ஒரு துயர கீதம் ஒரு என்பேன்! இந்தப் பெரியம்மாவுக்கும் மூத்தவர் தான் ராமநாதன் மாமா. அந்தக் காலத்திலேயே அடங்காத பிள்ளை...குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வரணும் என்று விளைந்த நிலத்தை விற்றுத் தாத்தாவை கன்வின்ஸ் செய்து
பர்மாவுக்குப் போய்ப் பணம் நிறைய அனுப்புவதாகச் சொல்லிச் சென்றவர்! அதன் பிறகு வெகு நாட்களுக்குப் பிறகு ஒருமுறை (நமது அம்மாவுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை எல்லாம் பிறந்தாச்சு) வந்திருக்கார். SR என்று பொறித்த ஒரு தம்மர் நம்மாத்தில் அவர் தந்து விட்டுப் போனதுதான்! அதன் பிறகு refugee ஆகத் திரும்பி வந்து பரலோகம் போயாச்சு! பர்மாவிலேயே நமது குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஐந்து பெண்களோடு வீடும் வசதியுமாக இருந்து வந்திருக்கார்...அந்தப் பெண்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள் என்றும், சென்னையில் தான் வசிக்கிறார்கள் என்றும் விஜயாக்கா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். சொந்தம் எப்போதும் தொடர்கதையாவதில்லை...இப்படி விடுபட்ட கதையாகவும், தொடர முடியாமலும் கூடப் போய் விடுகிறது...ஏன் அப்படி? கரூர் சித்தப்பா கூட நம் அப்பாவிடம் ஐயாஐயா என்று ஒட்டுதலாக இருந்தவர் தான்.....ஆனால் பணமும் பவிஷும் கூடியதாலோ என்னவோ நாளடைவில் சர்வ அலட்சியம் காட்டினார்...அப்பாவின் பெயரைக் கூட ராஜப்பா திருமணப் பத்திரிகையில் போடவில்லை...பெண் குழந்தைகளை வேலைக்குப் போக விட்டுக் குடும்பம் நடத்துவதாக நம் அப்பாவைக் கேவலமாகப் பேசினார்கள் என்று நமது சகோதரிகள் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கார்கள். அதுவும் வீரமணியின் கிண்டல் பிரசித்தியானது....அதனாலேயே நாளடைவில் எனக்கு அவர்களிடம் பேசப் பிடிக்காமல் போயிற்று.....ஆனாலும் அந்த சௌந்திரத்தைப் பற்றி எண்ணாமல் இருந்ததே இல்லை...மிகவும் பரிதாபத்துக்குரிய பெண்! இப்படியாக எல்லாக் குடும்பங்களிலும் வெளியே சொல்ல முடியாத ஒரு விதக் கசப்பு பீரிட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்பேன். வெறுப்பும், பிரிவும், வலியும், மன வேதனையும், நூலாம்படையைப் போல வீடங்கிலும் எங்கோ படிந்து விடுவதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை...உப்புப் பெறாத காரணமாகக் கூட இருக்கும்...எதனாலோ விரிசல் விழுந்த கண்ணாடியைப் போல உறவுமுறைகளும் ஆகி விடுகின்றன. இது மகாபாரதம் தொட்டே இருந்து வந்திருக்கிறது...
தாவரமாக இருந்தாலும் தொட்டாற் சுருங்கி கூடத் தொட்டால் தான் சுருங்கிக் கொள்ளும்...இல்லையா? ஆனால் ஒன்றைப் பற்றி மோசமாக நினைத்தாலோ, அல்லது கசப்பான நினைவுகள் வந்து விட்டாலோ உடனே நமது மனசு மட்டும் அப்படியே கூம்பிப் போய் சுருங்கி விடுகிறதே...ஏன்? அப்போ, மனிதன் தானே இன்னமும் அவனாலேயே சரியாகப் புரிந்து கொள்ளப் படாத ஒரு விசித்திரமான தாவரமாக இருக்கிறான்?....சிந்திப்போம்! அன்புடன் பானுரவி/18-6-2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi