*நினைவிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?* — இந்த நினைவுக் குறிப்பெல்லாம் ஏன் எழுதினேன் என்பதன் மீதான ஒரு தியானம். உடன்பிறந்த சகோதரர்களுக்கு நன்றி, கண்ணதாசன் கவிதைகளுடன் ஒரு நீண்ட உரையாடல், மேலும் ஒரு அமைதியான உணர்வு — இதயம் துடிக்கும் வரை நினைவுகள் மடியா.
நினைத்தேன் எழுதுகிறேன் என்ற இந்தத் தொடரைச் சிறு வயது அனுபவங்களை வைத்தும், என்றும் மனதுக்குள் பசுமரத்தாணி போல் பதிந்த நினைவுகளை வைத்தும் நான் எழுதத் தொடங்கிய போது, அதை முக்கியமாக என்னையொத்த சிந்தனையும் எண்ணமும் கொண்ட சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தேன். ஏனென்றால் உடலில் ஓர் அங்கம் போலும், உற்றநல் தோழன் போலும், தக்கதோர் சமயம் வந்து தளராமல் உதவும் போதும்...என்னோடு உடன்வருவது இந்த உடன்பிறப்புக்கள் அல்லவா?
என்னோடு உண்டு, உறங்கி, படித்து, விளையாடிய எனது அன்புச் சகோதரர்களை விடவும் வேறு யார் எனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பொருத்தமானவர்களாக இருக்க முடியும்? நான் உண்டதை அவர்களும் உண்டு, நான் சொன்னதை அவர்களும் வழி மொழிந்து, நான் படித்ததை அவர்களும் படித்து, நான் செய்வதை அவர்களும் அடியொற்றி....சகோதரிகளுக்கும் எனக்கும் சற்றே எட்டாத தூரம் இருந்த போது எனது ஆத்மார்த்த தோழர்களாகவும், சரிநிகர் சமானமாகப் போட்டியிடும் வல்லமை கொண்டவர்களாகவும், இன்றுவரை ஆதரவையும் அன்பையும் அள்ளியளிக்கும் வள்ளல்களாகவும் இருப்பவர்கள் அல்லவா இந்தச் சகோதரர்கள்?
எங்கிருந்தோம்...இன்று எங்கே இருக்கிறோம் என்று நினைக்கையில் நாம் பிறந்த ஊரும், மண்ணும், வீடும், பெற்றோரும், உடன் பிறந்தோரும், உற்றோரும், மற்றோரும்.......அப்படியே அணி வகுத்து அங்குலம் அங்குலமாக நம்மைச் செதுக்கிய சம்பவங்கள் அத்தனையும் நினைவுச் சங்கிலியாக நம்மைப் பிணைப்பது உண்மை! பழைய நாட்களை எண்ணும் தோறும் கண்ணுக்குத் தெரியாத ஆயிரம் நூல்களால் கட்டப்பட்ட சிலந்திக்கூடு போல நினைவுக் கூடுகள் மனசுக்குள் வந்து படர ஆரம்பித்த விந்தையை என்னவென்று சொல்வது? நெஞ்சாங்கூட்டில் நினைவுகள் நெருக்கமாக வலை பின்னியபோது பிரமித்துப் போனேன்......இதை எப்படிப் பகர்வேன்? ஒன்றும் புதியன அல்லவே? படிக்கையில் சலிப்புத் தட்டுமே ...இப்படி எல்லாம் நினைத்தேன். ஆனாலும் நாம் எல்லோருமே ஒரே பாட்டையில் பயணித்தவர்கள் என்பதால் எனது எழுத்துக்கு வரவேற்பிருக்கும் என்று நம்பினேன். எனவே எழுத முனைந்தேன்...
மேலும் காலம் வயோதிகத்தின் பட்டியலில் என் பெயரையும் ஒரு நாள் எழுதிவிடும் என்பதையும், அது சமயம் ஒரு வேளை எனது நினைவுகள் செல்லரித்துப் போனால் என்னவாகும் என்பதையும் ஒருநாள் திடீரென்று நினைத்துப் பார்த்து மடமடவென்று எழுத ஆரம்பித்தது தான் இந்தத் தொடர்! இதனைப் படிப்பதால் யாருக்கும் எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.....ஆனால் இப்படி நான் எழுதிய போதெல்லாம் நான் நமது பெற்றோருக்கும், உடன் பிறந்தோருக்கும் உணர்வு பூர்வமாக ஒரு மானசீக ஆராதனை செய்ய முடிந்தது என்பதே உண்மை! கடவுளுக்கு அருகே என்னை இன்னமும் நெருக்கமாக இந்த அனுபவங்கள் தந்த நினைவுத் தொடர் என்னை இட்டுச் சென்றது என்றால் அது மிகையில்லை!
அனுபவம் என்னும்போது கண்ணதாசனின் நினைவு வருகிறது...அனுபவம் என்பதே பெருநிதியம் என்கிறான்... *"ஆற்றிலும் குளித்தேன்; சேற்றிலும் குளித்தேன்! காற்றிலும் பறந்தேன்; கல்லிலும் நடந்தேன்! ஊற்றுப்புனலில் ஒளியினைக் கண்டேன்! மாற்றுப் பொன்னிலும் மாசினைக் கண்டேன்! பார்த்தது கோடி! பட்டது கோடி! சேர்த்தது என்ன? சிறந்ததோர் அனுபவம்!"* இப்படிச் சொன்னவன் ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவமே ஆண்டவன் என்று இன்னமும் சற்றே அழுத்திச் சொல்லுகிறான். இந்தப் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது...ஒரு பாமரனுக்கும் கடவுளுக்கும் உண்டான ஒரு உரையாடல்... *"பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பகர்ந்தான்! இறப்பினில் தெரிவது யாதெனக் கேட்டேன்; இறந்து பாரென இறைவன் பகர்ந்தான்! அன்பெனப் படுவது யாதெனக் கேட்டேன்; அளித்துப் பாரென இறைவன் பகர்ந்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன்; பகிர்ந்து பாரென இறைவன் பகர்ந்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன்; முதிர்ந்து பாரென இறவன் பகர்ந்தான்..."* (இப்படிப் போகும் அந்தப்பாட்டு) இப்போது அந்தப் பாமரன் கொஞ்சம் எரிச்சலுடன் கடவுளைக் கேட்கிறான் ... *"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்; ஆண்டவன் சற்றே நெருங்கி வந்தே அனுபவம் என்பதே நான்தான் என்றான்!"* என்ன ஒரு அற்புத விளக்கம்! நாமெல்லோரும் இறைவனின் கைப்பாவைகள் என்பதும் நமது அனுபவங்களின் மூலம் நம்மை அவன் நெறிப்படுத்துகிறான் என்பதும் தெரிகிறதல்லவா? கவிஞன் யானோர் காலக் கணிதம்...அறம்படு பொருளை உருப்பட வைப்பேன் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வளமார் கவி அல்லவா அவன்!
எனக்குக் கண்ணதாசனை ரொம்பவும் பிடிக்கும்.....சாகும் தறுவாயில் இருக்கும் ஒருவனைக் கூட வாழ நினைத்தால் வாழலாம் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டுவான்! மேலும் பாரதியைப் போலப் பெண்மையைப் போற்றுபவன் இவன்! உயிரினைக் காக்கும், உயிரினைச் சேர்க்கும், உயிரினுக்குயிராய் இன்பமளிக்கும்...உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா என்று சொன்னவன்! எழுத்துக்களால், வார்த்தைகளால், வாக்கியங்களால் ஒருவன் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்கிறான் என்றால் அது தற்போதைய காலங்களில் நிச்சயம் கண்ணதாசனாகத்தான் இருக்க முடியும்! குடிசைத் திண்ணைகளில் கை நனைத்து, மாளிகை முற்றங்களில் கண்ணயர்ந்து, வண்ணச் சோலைகளில் கானம் பாடும் குயில்களைச் சரண் அடைந்தது அல்லவா அவனது ஒவ்வொரு கவிதையும், பாட்டும்?
எனவே அந்தக் கண்ணதாசன் ஒவ்வொருவரின் அனுபவமும் ஆண்டவனின் பரிச்சயத்தை உணரும் பக்குவத்தைத் தருவதாய்க் கூறுவதை யாராலும் மறுப்பதற்கில்லை... ஒரு பாடலில் சான்றோர்களைக் கூப்பிட்டுக் கவிநடையில் கேள்விக்கணை தொடுக்கிறான்? *"பல் சான்றீரே! பல சான்றீரே! பகுத்துத் தொகுக்கும் பல் சான்றீரே! கல், மண், தீ, நீர், காற்றெனப் புவியோர்சொல்பொருள் அனைத்தும் தோன்றியது எங்ஙனம்? ..... வானிடை மேகமும், விண்ணிடை மதியமும் தானே இயங்கும் தத்துவம் யார்செயல்? .... கோடை, வசந்தம், குளிர்பனி, பூமழை மாறுவது எங்ஙனம்? மாற்றுதல் எவ்விதி?"* எனக்கு மேற்சொன்ன பாட்டில் இந்தப் பருவ காலங்களைப் பற்றிச் சொன்னது அருமையாகப் படுகிறது...நினைத்துப் பாருங்கள்...இயற்கையில் கோடை வரும்; பின்னே வசந்தம் வரும்; அதன் பின் குளிர்பனிக் காலம் துவங்கும்; அப்புறம் மழைக் காலம்...ஆனால் இவை அனைத்துமே ஒன்று மாற்றி ஒன்றாகக் காலச் சுழற்சியில் திரும்பப் திரும்ப வரும..ஆனால் மனித வாழ்வை எடுத்துக் கொண்டால், என்ன நடக்கிறது? குழந்தைப் பருவம் திரும்ப வராது...பால்ய வயது திரும்ப வராது; இளமைப் பருவம் மீண்டும் வராது; நடுத்தர வயது நிச்சயம் திரும்பாது...வயதாக ஆக ... அனுபவம் கூடி முதுமையில் அல்லவா முடிகிறது? எந்தப் பருவமாவது நமக்குத் திரும்பக் கிடைக்கிறதா? ஆனால் ஒவ்வொருவருக்கும் அழகிய அனுபவங்கள் அல்லவா கிடைக்கிறது? அதனால் தான் பட்டறிவால் கிடைத்த அனுபவங்களை, நினைவாற்றல் கொண்டு நான் எழுத நினைத்தேன்...இனி ஒரு காலம் அது போல் வராது என்றாலும், அந்த நாள் ஞாபகங்கள் மனதுக்குள் சூழும்போது இளமை கொப்பளிக்கிறது...அப்புறம் நம்மை ஆட்கொண்ட தமிழ்....இதைவிட்டு நாம் எங்கே போவது?...
கண்ணதாசன் சொல்லுவான்....*"வெட்ட முயன்றாலும் விழியுருட்டிப் பார்த்தாலும் தட்டிப் பறித்தாலும் தமிழின்றி ஏதுமில்லை..."* அவனது உடைமை தமிழ் மட்டுமே என்று சொன்னவன்! பிறிதொரு சமயத்தில் தன்னை விட்டுப் பெற்றோர்கள் பிரிந்து விட்ட போதிலும் எப்போதும் உடனிருந்து காத்தவள் தமிழ் என்பான். அந்தக்கவிதையும் கூட ஆழமாக என் நெஞ்சில் பதிந்த ஒன்று..எத்தனையோ ஆண்டுகள் ஆன போதும் அந்தக் கவிதையைச் சொல்லித் தமிழை ஆராதிப்பதில் அத்தனை மகிழ்ச்சி ஏற்படும்! ...நான் எழுதும் கதையோ கவிதையோ எந்த இதழிலாவது அச்சேறி விட்டால் அன்று இந்தப் பாடலைச் சொல்லித் தமிழை ஆராதிப்பேன்...இது உண்மை! *.....தான் பெற்ற பிள்ளையை ஏன்பெற்றோம் என்றுதான் தாயன்று மாண்டு போனாள்! தந்தையும் இப்பிள்ளை உருப்படாதென்று தான் தணலிலே வெந்து போனான்! ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன் உயரத்தில் ஒளிந்து கொண்டான்! உள்ளத்தின் விளிம்பிலே உனதருளால் தமிழ்மட்டும் உறவாக வந்து நின்றாள்! பேர்பெற்று யானுமோர் புகழ்பெற்று இவ்வுலகில் வாழ்வேனோ வண்ண மயிலே! ...........*
....இப்படிப் போகும் அந்தக் கவிதை. இவற்றை எல்லாம் மனதில் ஏற்றதாலோ என்னவோ எனது எழுத்துக்குள் பாரதியையும், விவேகானந்தரையும், இப்போது கண்ணதாசனையும் கொண்டு வந்திருக்கிறேன்... அனுபவம் இல்லாத வாழ்வேது? நினைவுகள் தந்த சுகத்தினால் அல்லவா சீதை ராவணனிடம் பதினான்கு ஆண்டுகள் உயிர்ப்போடு இருந்தாள். கண்டேன் சீதையை என்று சொன்ன அனுமனிடம் ராமன் என்னவெல்லாம் கேட்கிறான்? சீதை நினைவு கூர்ந்த அந்த மதுரமான நினைவுகளை அனுமன் சொல்லும் போது ராமன் எத்தனை நெகிழ்ந்து போகிறான்!
நினைவுகள் என்றென்றும் சுகமானவை...நினைவுகள் சோர்ந்துபோன மனத்துக்குப் புத்துணர்வு தர வல்லவை. பாலை வனச் சோலை ... பனிபூத்த காலை...எனவே தான் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் என்றுதான் நானும் "நினைத்தேன் எழுதுகிறேன்" என்று எழுதலானேன். சின்னஞ்சிறு துளிகள் நம்மை நிகழ் காலத்தை விட்டு கடந்த காலத்தில் பயணிக்கச் செய்யும்! ஆம்...காலம் மடிந்தாலும் நினைவுகள் மடியாது!
பாதைகளும் பருவங்களும் மாறும்! வாழ்க்கையும் சூழலும் மாறும்! பழக்கமும் வழக்கமும் மாறும்! பதட்டமும் பரபரப்பும் கூடும்...இத்தனையும் ஏற்பட்டாலும் ஒரு இனம் புரியாத வருடலாக நினைவுகள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாக! பசுமை நிறைந்த நினைவுகளுக்குப் பின்புலம் நமது அம்மாவும் அப்பாவும்...நம்மோடு பிறந்தோரும் என்பதில் ஏதும் சந்தேகம் உண்டா என்ன?
நமது தினசரிப் பயணத்தில், எதிர்பாராத நேரத்தில் எங்கிருந்தோ சட்டென்று ஒலிக்கும் ஒரு பாடல், நம்மை முதன் முறையாகக் கேட்ட அந்தச் சூழலுக்கே நம்மை எடுத்துச் செல்லும்! அன்று நம்மோடு இருந்த உறவுகள் நினைவில் வந்து உலாவும். மூக்கில் நெடியடிக்கும் மண் வாசனை...பாட்டும் அதன் பொருளும் நெஞ்சில் பதிந்த ஆனந்தமான தருணங்கள்...ரசிக்க ஆரம்பித்த பருவம்... மழை வரப் போவதைக் கட்டியம் கூறும் குவிந்த கருமுகில்கள்...மழை நீரைத் தேக்கி வைத்த பெரிய பாத்திரங்கள்...மழை நின்ற பின்னரும் ஓடுகள் வழியே சொட்டிக் கொண்டிருக்கும் மழைத்துளிகள்...அந்தப் பின்னணியில் சுவையான பலகாரம்! சுடான தேநீர்! சுகந்த ராஜிப் பூக்களின் நறுமணம்..பெருமாள் ஐயாவின் பெட்டிக்கடையும், பேச்சில் விளையும் வம்பும் வழக்கும்...மாசிப் பிறையும் லாவாண்டைத் திடலும்....சுந்தரமூர்த்தியும் மாட்டா ஊரணியும், டவுன் பஸ் ஸ்டாண்டும், ரோட்டுக் கடையும்...அப்பா வருகையும், அனைவரின் உவகையும்...
பண்டிகை..பூமணம்...பூஜைமணி...தோத்திரங்கள்,.....பக்தியின் பெருக்கம்.. நெய் மணக்கும் பதார்த்தங்கள், மடி ஆசாரங்கள், மந்திர உச்சாடனம்... வரலட்சுமி வருவார்...நவராத்திரியில் தேவியர் தரிசனம்...தினம் ஒரு அலங்காரம்...சுண்டல், வடையும் சுய்யமும் பொழியும்...வெடியும் மத்தாப்பும் சிதறும் தீபாவளி... ஆட்டம் பாட்டம்...சரசரப் புடவைகள்...சம்பாஷணைகள், சமையல்கட்டு...சாப்பிடும் தட்டு....கரண்டிச் சத்தம்...கலகலப் பேச்சு ... ஆண்டுகள் கடந்தாலும் அழியாத கோலங்கள்...அம்மாவின் பெட்டி...ஜாதிக்காய் மணக்கும்...ஆர்மோனியத்தில் அருவியாய் இன்னிசை .... அப்பாவின் எழுத்தில் இசைப்பயல் வீசும்......பேச்சில் தமிழின் இனிமை தெறிக்கும்....சின்ன நோட்டில் அன்றையக் கணக்குகள்..
அம்மாவின் கைமணம், வாசல் கோலம்...செம்மண் காப்பு, முற்றப் பெருவெளி, சாய்வுத் திண்ணை, தவிட்டுக் குருவிகள், மெதுவாய் ஓடும் ராமனின் அணில்கள், கள்ளப் பார்வையில் காக்கா கத்தும்..கரைந்து சொல்லும் விருந்தினர் வருகை...மொட்டை மாடி, கூட்டாஞ்சோறு, கரம்பை மண்ணும் களிமண்ணும் ...முந்திரிப் பழமும் மகிழம்பூவும்....பிள்ளையார் பிடித்தே பூக்களை வைப்போம்....ஊரணி நீரில் தொபுக்கென விழுவோம்...உடனே எழுவோம்...அழுதோமில்லை...ஆத்திரம் இல்லை...சலிப்பும் இல்லை... நினைவுக் கோட்டைக்குள் நிதமும் வெளிச்சம்! விளக்காய் இருந்து அணைத்துக் கொள்ளும் வெளுத்த மனசுடன் அம்மா அப்பா...ஆதரவான துணையாய் அங்கே வந்திடும் அக்கா ஐவர் உண்டு... உள்ளம் தன்னில் வெள்ளப் பெருக்காய் அன்பே இருக்கும்...அதட்டலும் இருக்கும்....அடுத்தடுக்காக அமளியும் துமளியும் .... பால்ய வயது...பள்ளிப் பருவம்...துள்ளிச் சென்ற இளமைக் காலம்...அநேக சம்பவம் அங்கே நிகழும்...ஆயினும் நமக்கோ எதுவும் புரியாது......
வாழ்க்கை என்பது வட்டம் போலும்! சுழலும் போது சூழ்ந்திடும் நினைவுகள்...அழகிய நிகழ்வுகள்...அன்றைய நாட்கள்...வழுக்கிச் செல்லும் பாசமெல்லாம் பளிங்காய்த் தெரியும் பாதரசமோ? அந்த நாட்களின் தடம் எல்லாம் கோடை வெயிலில் குளிர் தரும் நிழலாய் ....உணவில் சேர்க்கும் உப்பைப் போன்று தினை போல் நெஞ்சில் உறைந்தே இருக்கும்! காலச் சுழற்சி...இடத்தில் பெயர்ச்சி...ஆலம் விழுதென அன்பின் முதிர்ச்சி! மூலைக் கொருவராய் முடங்கிய போதும் பாலைவனத்தில் பனிபோல் தெளிக்கும்! குளிர்தரு நிழலாய்க் கூடிடும் நாட்கள்...குழந்தை போல் மனம் குதித்தே ஆடிடும்...யாருக்கில்லை யாக்கையும் மனமும்? யாருக்கில்லை நிழலும் நினைவும்? யாருக்கில்லை உறவும் நட்பும்? யாருக்கில்லை அன்பும் பாசமும்? கொஞ்சம் நினைவைக் கிள்ளிப் பகர்ந்தால், அங்கே பொங்கும் அருவியாய் வீழும்....வேண்டாமென்று ஒதுக்கி வைத்தாலும் மீண்டும் மீண்டும் ஊற்றாய்ப் பெருகும்...இளமை என்பது இளநீர் போல...தாகம் எடுப்பின் தணிக்கும் என்பேன்!
உள்ளே சென்று உள்ளத்து இடுக்கில் மெள்ளப் பார்த்தால் அள்ளக் குறையாச் செல்வம் போலே, வேண்டிய நினைவுகள் கொள்ளை போகாமல் குவிந்தே கிடக்கும்! மூச்சுக் காற்றாய் முந்தைய நாளின் பேச்சும் நிகழ்வும் வாசம் வீசும்! பிறந்த ஊரும் வளர்ந்த வீடும் மறந்து போயின், மன்னிப்பில்லை! நிழலின் அருமை வெயிலில் தெரியும்....அதுபோல் என்பேன் அந்நாள் நினைவும்! *அன்பும் அறிவும் அறமும் வாழ்வெனச் சொன்ன பெற்றோர் திருவடி பணிவோம்! நன்றியில் நனைந்து நாளும் நெஞ்சினில் வந்தனை செய்து வாழ்த்தி வணங்குவோம்!*
உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். அவ்வப்போது பதில் எழுதி என்னை உற்சாகப்படுத்தியமைக்கு எனது நன்றியும் அன்பும். நாம் ஒவ்வொரு முறை சந்தித்துக் கொள்ளும் போதும் பேசிக்கொள்ளும் பழைய நிகழ்வுகள் தான்...ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பேசுவது போல் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை...ஒவ்வொரு தடவையும் எழுதும்போது, உண்மையிலேயே நான் அந்தநாட்களுக்குச் சென்று வந்தது போல் உணர்ந்தேன். இன்னும் எத்தனையோ நினைவுகள் மனசுக்குள் மண்டிக் கிடக்கின்றன...சில நினைவுகள் அப்படியே அந்தரங்கமாக அழுந்திக் கிடக்கின்றன...அவை அப்படியே கிடக்கட்டும்....மறைபொருள் இருந்தால் தானே எதுவும் மகத்துவமாகிறது?
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது...கடந்து வந்த பாதை இருக்கிறது...காலம் முன்னோக்கி ஓடும் நதி என்பார்கள்..கடந்த காலமும் நினைவுகளும் நமது வாழ்க்கைப் போராட்டத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கடந்து போவதென்னவோ உண்மை தான்... ஆனாலும் கூட, நன்றாக மேய்ந்தபின் ஆற அமர அசை போடும் மாடு போல இப்படி என்றாவது ஒரு சமயத்தில் பழைய நாட்களை நினைக்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறதென்பதும் கூடவே நமக்கு நன்றியுணர்ச்சி இருக்கிறது என்பதும் புலனாகிறது..... வாழ்க்கை நமது காலங்களிலேயே எத்தனையோ மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது...பொருளாதாரத்தில், வாழும் முறையில், என்று எத்தனையோ திருப்பங்கள்..சவால்கள்! அவற்றுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதற்கு நமது சிறுவயது அனுபவங்கள் அல்லவா துணை நிற்கிறது? புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இது போல ஒரு கட்டமைப்பு மிக்கக் குடும்பத்தில் பிறந்திருக்க முடியும்...ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன். இத்தருணத்தில் கடவுளுக்கு நன்றியுடன் மிகப் பெரிய வணக்கம் செலுத்துவதைத் தவிர என்னால் வேறென்ன செய்ய முடியும்? அன்புடன் பானுரவி 30th December 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi