புடவை மீது எனக்கு ஏன் என்றுமே ஒரு தீராத மயக்கம் என்று இன்னும் சொல்ல முடியவில்லை. செட்டிநாட்டில் ஆச்சிகள் கட்டிக் கொண்ட கண்டாங்கி, கொட்டடிப் புடவைகள் முதல் எனது முதல் ஆரஞ்சு நைலெக்ஸ் புடவை வரை — ஒவ்வொன்றும் என்னுள் ஆழமாகப் பதிந்தவை. என்னை வளர்த்த புடவைகளுக்கும், அவற்றைத் தந்த பெண்களுக்கும் ஒரு அத்தியாயம்.
இந்தப் புடவை மீது எப்போது ஒரு தீராத மயக்கம் வந்தது என்று தெரியவில்லை... செட்டிநாட்டில் ஆச்சிகள் கட்டிக் கொண்ட வித்தியாசமான கண்டாங்கிப் புடவைகளும், கொட்டடிப் புடவைகளும், அதிகம் உறுத்தாத பேஸ்டல் வண்ணப் பட்டுப் புடவைகளும், அதை ஆச்சிமார்கள் நறுவிசாக உடுத்திக் கொண்ட தோரணையும் மனதுக்குள் புகுந்து கொண்டு என்னை வசீகரித்தது என்று நினைக்கிறேன்.
எப்போது என்று நினைவில்லை...எனது முதல் புடவை ஒரு ஆரஞ்சு வண்ணம் கொண்ட நைலெக்ஸ் என்று மட்டும் ஞாபகம் இருக்கு. மலைக்கோட்டை வீட்டில் வசித்த போது ஒரு தீபாவளியின் போது அந்தப் புடவை கிடைத்தது. இந்தப் புடவை கட்டும் முன்பாக வந்த தாவணிக் கனவைச் சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.
பெண் வளர்த்தியோ பீர்க்கங்காய் வளர்த்தியோ என்பார்கள்...இளமைக்கு வறுமை என்பது ஒருபோதும் இல்லையே! எனது வயதையொத்த பெண்கள் எல்லாம் தாவணி அணிந்த போது நான் மட்டும் ஆண்பிள்ளைக் காலர் வைத்த சட்டை போட்டுக் கொண்டிருப்பேன். (எனது சட்டைகள் எல்லாம் பேபி தைத்தவை தான்...) காடாத் துணியில் தைத்த உள்ளாடை இறுக்கமாக இருக்கும்படி அணிந்து அதன் மேலே இந்தக் காற்சட்டை! பள்ளியில் என்னைச் சிலர் கேலி செய்ததை வீட்டில் சொல்லத் தயக்கம். வெட்கம் விளையும் பருவம்....
திருச்சியிலிருந்து விஜயாக்கா ஒருமுறை வந்த போது "நன்னா இருக்கு! பானு உசந்துட்டா...அதது அந்தந்த வயசுக்கேத்த மாதிரி இருக்கணும்." என்று சொல்லி வீட்டுக்கு வந்து போகும் புடவைக்காரரிடம் ஒரு தாவணி வாங்கித் தந்தார். வாளவில் வண்ணத்தில் அது ஒரு ரேயான் சில்க் தாவணி. அன்றைக்கு நான் அடைந்த ஆனந்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அப்புறம் சுகுணாக்கா காரைக்குடியிலிருந்து இரண்டு தாவணிகள் வாங்கி வந்தார். தாவணி அணிந்த பின் எனக்குச் சிறகுகள் முளைத்தது போல் உணர்ந்தேன். ஆனால் நானும் பெரிய பெண்ணாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்கிற நிஜமான அவஸ்தை அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் எனக்கு எங்கே புரிந்திருக்கப் போகிறது?
சிறிது நாட்கள் வாளாடியில் இருந்த சமயம்..கணேஷ் சின்னக் குழந்தை. அப்போது ஒருநாள் சேகர் ஒரு செய்தியோடு வந்தான். திருச்சி ஜூனியர் சேம்பர் ஆ:.ப் காமர்ஸ் என்ற இடத்தில் எனக்கு ஒரு வேலை...டைப்பிஸ்டாக. சாவித்ரிக்கா ஆபீஸ் கம் ரசம்பேட்டை ஐயர் மூலமாக வந்த தகவல். உடனே அவரோடு கிளம்பிப் போனேன். அவரது காரை (4664 Ambassador Pistachio colour) அனுப்பி என்னை அழைத்துக் கொண்டு போனார்கள். வீடு படு பிரம்மாண்டம். அது சமயம் கல்கி வரதராஜுலு என்பவர் அந்த TRICHY JAYCES-ன் பிரசிடென்ட். அவரது வீட்டிற்குள்ளேயே இந்த ஆபீஸ். No.22 Sundardas Tank Street என்ற இடத்தில் அவரது வீடு. அரை நாள் மட்டுமே வேலை. பாவாடை தாவணியில் தான் வேலைக்குச் சென்று வந்தேன்...120Rs per month. ரொம்பவும் வேலை இருக்காது. போர் அடித்தது...
ஆனால் அந்த இடம் மனதுக்குப் பிடித்திருந்தது....கல்கியின் பெண் பாரதிக்கும் அவரது மனைவிக்கும் என்னை ரொம்பவே பிடித்துப் போனது. இளநீர்ப் பாயசம், மிக்ஸர், எள்ளுருண்டை, சோமாஸ் என்று நிறையத் தின்னக் கிடைக்கும்...நிறைய மாகசின்ஸில் படித்துக் கொண்டிருப்பேன்...மத்தியானம் வீட்டுக்கு வந்து விடுவேன். அந்தப் பெண் பாரதிக்கும் திருமணம். திருச்சி வாசவி மஹாலில். கல்யாணத்துக்குக் கட்டிக் கொள்ளப் பட்டுப் புடவை வேண்டும்...சாவித்ரிக்காவிடம் ஒரு புடவை இருந்தது. அம்மா மாதா மாதம் சீட்டுக் கட்டி வாங்கிய முதல் பட்டுப் புடவை. க்ரீம் கலரில் சிகப்பு பார்டர் போட்டு அழகாக இருக்கும். அக்காவே இன்னும் கட்டிக் கொள்ளவில்லை...எனவே கேட்கத் தயக்கம். முக்கியமாக பயம்...அதனால் பேசாமல் கிளம்பி வாளாடிக்குப் போய் விட்டேன்.( அப்படிப் போய் வந்ததுக்கு அக்காவிடமிருந்து நிறையத் திட்டு கிடைத்தது!!)
சுகுணாக்காவிடமிருந்து ஒரு பட்டுப் புடவை (பிரவுன் கலரில்) வாங்கி வந்தேன். அக்காவின் அந்தப் பெருந்தன்மையான உதவிக்குப் பிரதியாகப் பின்னாளில் நான் நிறைய ஜாரிகை போட்டு கரும்பச்சை வண்ணப் பட்டுப் புடவை வாங்கித் தந்தேன். சுகுணாக்கா நெகிழ்ந்து போய் விட்டார்! என்னிடம் அந்தப் புடவைக்கு ஏற்ற பொருத்தமான ப்ளவுஸ் இல்லை. ஆனாலும் இருக்கவே இருக்கு வெள்ளையோ/கருப்போ ஒரு ப்ளவுஸ் என்று சும்மா சமாளித்தேன். அப்போது மனசுக்குள் மட்டும் ஒரே ஏக்கம்...சே! ஒரு நல்ல புடவை இல்லையே என்று!
பகவான் கிருஷ்ணரைத் திட்டித் தீர்த்தேன். மகாபாரதத்து திரெளபதிக்கு மட்டும் குறையாமல் வளர வளரப் புடவையைக் கொடுக்கத் தெரிந்த உனக்கு ஏன் எனக்கும் புடவைகள் தரணும்னு தோணலை? என்று கிருஷ்ணர் சுலோகம் சொல்வதைக் கூட கொஞ்சம் நாட்கள் நிறுத்தி வைத்தேன்... வேற ஏதும் வேண்டாம்...வாழ்க்கையில் நிறையப் புடவை கட்டிக்கணும்..அதுவும் .விதவிதமாக் கட்டிக்கணும் என்றெல்லாம் அந்தச் சமயத்தில் நினைத்துக் கொண்டேன்!
அப்புறம் வந்த நாட்களில் மெயின்கார்ட் கேட் தேவர் ஹாலில் கைத்தறிப் புடவை கண்காட்சி நடக்கும்...அங்கு போய் மூன்று புடவைகள் வாங்கியது ஞாபகம் இருக்கு. அப்போதெல்லாம் ராஜா சொல்லுவான்...காட்டன் புடவை கட்டிக்கோ பானு...ரொம்ப டீசன்ட்டா இருக்கும் என்பான். எப்போதும் அவன் ஒரு ரசிகன்.... ஓரளவு எனது மனதைப் படித்த உற்ற தோழன் அவன்....(இன்று வரை!!) பின்னொரு நாளில் எனது :.பிரெண்ட் சாவித்திரி டில்லியிலிருந்து ஒரு மஸ்டர்ட் கலர் காட்டன் புடவை பரிசாகத் தந்த போது ரொம்பவே மகிழ்ந்து போனேன்.(வெறும் பத்தொன்பது ரூபாய் தான்)! ஆனாலும் புடவை மீது எனது மோகம் என்னவோ வளர்ந்து கொண்டே போனது.
அந்த நாட்களில் சாவித்ரிக்கா/பேபி என்று சுழற்சியில் புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டு வேலைக்குப் போவதுண்டு. அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த போது அப்பாவே என்னைச் சென்னியப்பா ஸ்டோர்ஸுக்குக் கூட்டிண்டு போய் மூன்று புடவை வாங்கித் தந்தார். மிகுந்த சந்தோஷமாக இருந்த தருணம் அது...எனது டிபார்ட்மென்டில் இருந்த கமலாகணேஷ் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தாள். தினமும் ஒரு புடவை கட்டிக் கொண்டு வருவாள். ...நான் மலைத்துப் போனேன். இது எப்படி சாத்தியம் என்று. அநேகமாக அங்கு வேலை பார்த்தவர்கள் அனைவருமே அப்படித்தான் வந்தார்கள்...என்னால் அப்படி எல்லாம் புடவைக்குச் செலவழித்துக் கொண்டு இருக்க முடியாது என்பது நிதர்சனமாகத் தெரிந்த போதும் இந்தப் புடவை மோகம் மட்டும் தீரவே இல்லை....
மைசூர் மன்னர்களின் அரண்மனை ஓவியங்களில் மகராணிகளும், ராஜா வம்சத்துப் பெண்டிரும் கட்டியிருக்கும் சேலைகளில் தெரியும் கம்பீரமும், பெண்மையும், நேர்த்தியும் என்னை ரொம்பவே அசத்தி இருக்கு. ஒரு வேளை நானும் கூட அந்தக் காலத்தில் ஒரு மஹாராணியாக இருந்திருப்பேனோ!(ஹாஹா). பிரதமர் இந்திரா காந்தியின் கம்பீரமான புடவை எத்தனை மரியாதையைத் தரும்? அதே போல் ஸ்ரீ லங்காவின் பண்டாரநாயகாவின் சேலை...இப்படியாக ஒரு மரியாதை தரும் தோற்றத்தைத் தரும் புடவையை யார் தான் விரும்ப மாட்டார்கள்?
எனது சினேகிதிகள் ராஜியும் நாகாவும் நானும் ஒவ்வொரு வருஷமும் சேர்ந்தாற் போல் புடவை வாங்கிக் கொள்ள ஆரம்பித்தோம். அப்போதெல்லாம் பாலியஸ்டர், மோஷி மோஷி, உல்லி உல்லி போன்ற புடவைகள் பிரசித்தம். ப்ராஸோ, காலிசிந்த், எல்பார், டிவிங்கிளின் நைலான், கிளியோபாட்ரா போன்ற புடவைகளும் பேமஸ் ஆக இருந்தன. நாங்கள் மூவரும் கடைக்குப் போய் வாங்குவோம். ஒரே நாளில் சொல்லி வைத்துக் கட்டிக் கொள்ளுவோம். மல்மல் என்று ஒருவிதமான காட்டன் புடவை அட்டகாசமாக இருக்கும்...துரை என்று (இப்பவும் இருக்கு) ஆண்டார் வீதியில் எனது :பிரெண்ட் சாவித்திரியின் ஆஸ்தான தையற்காரர் தான் பிளவுஸ் தைப்பார். புதியதாகப் புடவை கட்டிக் கொள்ளும் போதெல்லாம் எல்லாக் கவலையும் மறந்து உற்சாகம் கரை புரண்டோடும்.
பிள்ளையார் கலெக்ஷன் மாதிரிப் புடவை கலெக்ஷனும் ஆகிவிட்டது. சுங்கிடி, கைத்தறி, ஆரணி என்றெல்லாம் போய் அத்தனை விதப் புடவைகளும் வரிசையாக எனது வார்ட்ரோபில் இருப்பதைப் பார்க்கையில் பகவான் கிருஷ்ணர் மீது அன்பும் பிரேமையும் பொங்கி வழிகிறது! பொல்லாத கண்ணா என்று செல்லமாக இப்பவும் அந்தப் போக்கிரிக் கண்ணனைத் திட்டுகிறேன். பின்னே? புடவை என்னும் பெரு நிதியத்தை என் முன்னே வண்ண ஜாலமாக இறைத்து வைத்திருக்கிறானே? திரெளபதி மட்டுமல்ல...நீயும் தான் எனக்கு உசத்தி என்கிறாற் போல் அந்த மாயக் கண்ணன் இப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறானோ ....தெரியவில்லை!
காஞ்சிபுரம் பட்டும், திருபுவனம் பட்டும், போச்செம்பள்ளி புடவையும், பனாரஸ் பட்டும், கத்வால் புடவையும்...மைசூர் சில்க்கும், பெங்களூர் சில்க்கும், கல்கத்தாவின் தாந்த் சில்க்கும், கேரளாவின் கசவுப் புடவையும், ஒரிசாவின் பொம்கா சில்க்கும், சம்பல்பூர்ப் புடவையும், மகாராஷ்ட்ராவின் பைத்தானிப் புடவையும், குஜராத்தின் பாந்தினி புடவையும், படோலா புடவையும், மத்யப்ரதேஷின் சந்தேரிப் புடவையும், மகேஷ்வரிப் புடவையும், ராஜஸ்தானின் லஹேரியா சில்க்கும், லக்னோவின் சிக்கன்காரி புடவையும், காஷ்மீர் சில்க்கும்.....இவை தவிர பிரிண்டட் சில்க்கும், எம்ப்ராய்டரி புடவைகளும் .... சில்க் காட்டனும், கோட்டா சாரியும் .... அன்பளிப்பாகவும், ரவி வாங்கித் தந்தவையுமாக ஏகத்துக்குப் புடவைகள் வண்ணக் களஞ்சியமாக இருக்கின்றன. அந்தப் புடவைகளுக்குள் நான் அடைக்கலம்!
அது மட்டுமல்ல...ஒவ்வொரு கோவிலுக்குச் செல்லும் போதும் அம்மன் திருமேனியைத் தழுவிக் கொண்டிருக்கும் புடவைகளைக் காண்பது கூட எனக்கு அத்தனை ரசத்தை உண்டாக்கும்! அம்மனின் திருமுகத்தின் தீட்ஷண்யத்தால் அந்தப் புடவைகள் இன்னமும் அதிகப் பிரகாசமாக ஒளிர்வதாகப் படும்! அமெரிக்காவில் இருந்த போது ஒரு தடவை லிவர்மூர் சிவாவிஷ்ணு கோவிலில் ஒரு பிரார்த்தனைக்காகப் பணம் கட்டிய போது, அங்குள்ள அம்பாளுக்குக் கட்டிய ஒரு சிகப்புப் பட்டுப் புடவையைத் தந்தார்கள். அதை அம்மனின் அருட் பிரசாதமாக எண்ணி அப்படியே எனது வார்ட்ரோபில் வைத்திருக்கிறேன்...
உண்மையிலேயே நாம் உடுத்தும் புடவையில் நெய்திருப்பது வெறும் நூல் மட்டும் அல்ல. அது ஒரு அற்புதமான பந்தம்! சேலையில் கலந்திருப்பது வண்ண நிறமல்ல...வாழ்வின் நிறம்! ஒவ்வொரு புடவையும் ஒரு பொக்கிஷம்! சீராக வருவதும், சிறப்பாகத் தெரிவதும் இந்தப் புடவைகள் தான்...புடவை என்பது பெண்களின் பெருமையைக் கூட்டுவது. இந்தியப் புராணங்களை எடுத்துக் கொண்டால் புடவை அல்லது வஸ்திரம் என்பது பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைக் குறிக்கிறது. பண்டைய புராணக் கதைகளில் புடவையை ஒரு மாய நெசவாளி நெய்ததாகவும், அவர் ஒரு பெண்ணைப் பற்றிக் கனாக் கண்டதாகவும் அதில் அவளது கண்ணீரின் பளபளப்பு, அவளது அலை பாயும் மனது, நெளிநெளியான கூந்தல், மனோபாவத்தின் நிழல்கள், அவளது தண்ணென்ற குளிர்ச்சியான ஸ்பரிசம், ...இதெல்லாவற்றையும் உணர்ந்து அவற்றைத் தான் நெய்யும் சேலையில் கொண்டுவர முயற்சிப்பதாகவும்....அந்த நெசவு தொடர்ந்து கொண்டே போனதால், பல கஜங்களை அவர் நெய்தார் என்றும் படித்தது நினைவுக்கு வருகிறது.
கிராமத்துப் பெண்ணைப் பார்த்தால் ரொம்ப இலகுவாக தலைப்பை ஒரு சுருட்டு சுட்டித் தலையில் சும்மாடு கட்டிக் கொண்டு ஒரு தயிர்ப் பானையோ, கறிகாய்க் கூடையோ வைத்துக் கொள்ள முடிகிறது! அதுவும் ரிதமிக்காக அவர்கள் நடப்பதைக் காண்பதே சுகானுபவம்! தட்டுக் கொசுவம், முன் கச்சம், பின் கச்சம், மடிசார்....என்று இன்ன பிற வகைப் புடவைகளைக் கட்டிக் கொள்ளும்போது பெண்களின் வனப்பு கூடுகிறதே தவிர, எந்தப் பெண்ணும் புடவை ஒரு அசெளகர்யம் என்று எண்ணியதே இல்லை...இல்லாவிட்டால், இப்படி எந்த விதத் தையலும் இல்லாமல் வெறுமனே ஒரு ஆறுகஜத் துணியை எளிதாக நாம் அணிந்து கொள்ள முடியுமா?
முன் காலத்தில் அம்மாவின் பழைய பருத்திப் புடவையை உத்தரத்தில் கட்டிக் குழந்தைக்குத் தூளி என்ற வகையில் செய்து ஒரு தாலாட்டுப் பாடுவார்கள். குழந்தை அந்தத் தூளிப் புடவைக்குள் ஒரு சொர்க்கத்துக்கே போயிருக்கும்....இந்தப் புடவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவளது மன நிலையை, மகிழ்ச்சியை, துக்கத்தை வெளிப்படுத்தும் உற்ற தோழியாகவே விளங்குகிறது.
ஒரு பெண் புடவை அணிந்தவுடன், அவளுக்குள் ஒரு அற்புத மன மாற்றம் நிகழ்வது உண்மை. ஒரு கம்பீரம் வெளிப்படும்; ஒரு அழகு மிளிரும்; ஒரு கவர்ச்சி தென்படும்...எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மரியாதை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை... எத்தனை உடைகள் வந்தாலும் புடவைக்கு ஈடு இணை இல்லை. எல்லா வயதினருக்கும் பொருத்தமான புடவைகள் நமது தேசத்தின் பாரம்பரியச் சீருடை என்பேன்.
தாய்தந்தையர் வாங்கித் தந்த புடவை ஒரு பாதுகாப்பான அரண் என்றால், சகோதர சகோதரிகள் வாங்கித் தந்த புடவைகள் ஒரு அன்பின் அரவணைப்பு அல்லவா? கூரைப் புடவையில் குடும்பத்தை ஆரம்பிக்கையில் கணவர் வாங்கித் தரும் புடவைகள் குலவிளக்காக ஒளிர்வதற்கான கவசம் அல்லவா? அது சரி ..... அன்போடு குழந்தைகள் வாங்கித் தரும் புடவைகள் ? ஆ! அவற்றை உடுத்தும் போதெல்லாம் என் குழந்தைகள் எனது கருவறையில் குடியிருந்த கதகதப்பு அல்லவா கிடைக்கிறது? அந்தத் தருணங்களில் அப்படியே உடம்பு நெகிழ்ந்து மனது குழைந்து போய் விடுகிறதே? இது விந்தையிலும் விந்தை அல்லவா? இப்படியாகப் பெற்றோர், சகோதரன், சகோதரி, சினேகிதி, கணவன், குழந்தைகள் என்று எல்லாமாகப் பின்னிப் பிணைந்து ஒரு பெண்ணின் தொப்புள் கொடி பந்தமாக இருப்பதுதான் இந்தப் புடவைகள் என்ற கருத்துக்கு மாற்று இல்லை! ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
அது போல் ஒவ்வொரு புடவைக்குள்ளும் ஒவ்வொரு கதை இருக்கும்! புடவை மடிப்புகள் போல கதைகளின் அத்தியாயங்களும் அங்கே நிறையப் புதைந்திருக்கும்! எனது புடவைகளுக்குப் பின்னாலும் நிறையக் கதைகளும், சம்பவங்களும்....அவற்றை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு, பெரியபுராணம் போல் புடவைப் புராணம் ஆகிவிடுமே...எனவே நிறுத்திக் கொள்கிறேன்! அன்புடன் பானுரவி/11th Dec 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi