*அப்பா… அப்பா.* என்னைச் சிலிர்க்க வைக்கும் ஒரு மந்திரம். என்னைக் கட்டிப் போடும் ஒரு பாசக் கயிறு! தெய்வம், ஆசான், கலைஞன், ஜோசியர், பேட்டிய நாட்களில் ஒரு தாயுமானவர். அப்பாவை — இன்றும் கூட என்னை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த உத்தமனை — நினைத்து எழுதிய ஓர் அத்தியாயம்.
அப்பா...அப்பா! என்னைச் சிலிர்க்க வைக்கும் ஒரு மந்திரம். என்னைக் கட்டிப் போடும் ஒரு பாசக் கயிறு! எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை மெய் சிலிர்க்க வைத்து, என்னுள் பனியாய் உருகி, என்னை அன்பால் உருக்கிய ஒரு மகானுபாவர்!
எனது பேரக் குழந்தைகளை நான் கேட்பதுண்டு....*"பானுமாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும்?"* இரண்டு கைகளையும் முடிந்த வரையில் அக்குழந்தைகள் விரித்துக் காண்பிக்கும்...எல்லை என்பது இல்லாத விஸ்தாரமானதாக அது இருக்கும்! அப்படித்தான் எனக்கும்.....எல்லையில்லாத ஒரு பரவெளியைப் போல் அப்பாவின் மீது கொண்டிருக்கும் அன்புக்கு ஒரு அடைக்கும் தாழ் என்பது இல்லாமல் இருந்திருக்கு...
அப்பா என்றால் தெய்வம். அப்பா என்றால் குரு. அப்பா என்றால் ஆழ்ந்த பக்தி. அப்பா என்றால் கொள்ளை அன்பு, கொஞ்சுதமிழின் குலவு கவிதை! அப்பா என்றால் பரவசம். அப்பா என்றால் மதிப்பான ஆசான். அப்பா என்றால் ஆன்மா. அப்பா என்றால் இன்னுயிர்த் தோழன். அப்பா என்றால் அறிவுக் களஞ்சியம். அப்பா என்றால் இசையின் பெருக்கம். அப்பா என்றால் நன்னம்பிக்கை. அப்பா என்றால் ஆயிரம் பலம்! அப்பா என்றால் அனைத்திலும் ஆற்றல். மொத்தத்தில் அப்பா என்றால் ஒரு என்சைக்ளோபீடியா. ஆம்! அப்பா என்றால் அத்தனை சிறப்புக்களும் கொண்ட ஒரு பெரிய ஆச்சரியம்! திருவும் கல்வியும் சீரும் சிறப்பும், உருவும் சீலமும் ஊக்கமும் நமக்களித்த உத்தமர் அல்லவா அப்பா? நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, நிறைந்து நிறைந்து நம்முள்ளே வீற்றிருக்கும் ஒரு நன்னிதியம் அல்லவா அப்பா? அப்பாவையும் அம்மாவையும் எண்ணும் தோறும் நமது துயரமும் துக்கமும், அச்சமும் இடரும் உண்மையிலேயே தொலைந்தது போல் அல்லவா இருக்கிறது? அறிவும், மெய்யன்பும், அருளும், ஆக்கமும், ஊக்கமும், உயர்வும் அல்லவா நம்மை வந்து சேர்கின்றை! *அப்பா* என்ற சொல்லில் முழுச் சக்தியும் அல்லவா தேங்கிக் கிடக்கிறது!
*அப்பா துணை* என்றெல்லாம் பரீட்சை எழுதும் முன்பாக ஒரு சின்னப் பேப்பரில் அல்லது கிளிப் வைத்து எழுதும் அட்டையின் ஓரத்தில் எழுதிவிட்டுத் தான் தேர்வையே தொடங்குவேன். பிறந்த நாள் தொடங்கி வளரும் ஒவ்வொரு நாளும் தனது குழந்தைகளுக்கு உலகைக் கற்றுத்தரும் ஆசானாகத்தான் அப்பா என்பவர் இருக்கிறார் என்றாலும், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் ஒரு வரப்ரசாதம் என்பேன். அன்னம் ஊட்டுவது அம்மாவாக இருக்கும்; ஆனால் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்களாகத் தான் இருக்கும்!
நல்ல அறிவுரைகளையும் புத்திமதியையும் எப்போதும் திரும்பத் திரும்பச் சொல்லி நம் அனைவரையும் நல்வழிப்படுத்தியவர். (புத்திசாலித்தனத்தைக் கடையில் வாங்க முடியும்? மேயப்போகும் மாட்டுக்கு யாராவது புல்லுக் கட்டுவார்களா என்று சொல்லுவார்.) எதைப் பற்றியும் அப்பாவிடம் பயமில்லாமல் பேச முடியும். புராணங்கள், பக்திக் கதைகள் எல்லாம் அத்துபடி... அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளும் தெரிந்தவர். காரைக்கால் அம்மையாரையும், திருநாவுக்கரசரையும், நாத்தழும்பேறப் பன்முறை நமக்குச் சொன்னவர். வள்ளி திருமணத்தையும், விநாயகர் பெருமையையும் பாக்களாகப் புனைந்து வைத்தவர். ராமாயணத்தை ஏழே விருத்தங்களில் அடக்கியவர். அம்பாளை நெக்குருகிப் பாடித் தொழுதவர். நவநீத கோபால சுவாமியின் சரிதத்தைப் பாடியவர்.
பகவான் ரமணரின் அணுக்கமான சீடர். பரம பக்தர். ரமணரின் பெயரைக் கொண்டே மணிமணியாக மாப்பிள்ளைகள் தனக்கு வாய்த்ததாகச் சொல்லி மகிழ்ந்தவர். (பாலசுப்ரமணியன்/லக்ஷ்மணசுப்ரமணியன்/வெங்கட்ரமணி)... ரமணன் என்று ரமணிக்குப் பெயரிட்டவர். கஞ்சிரா வாசிப்பதில் வல்லவர். சிப்ளாக்கட்டை வாசிப்பார். கடம் வாசிப்பதில் நிபுணர். அப்பழுக்கில்லாத ஒரு அபாரமான இசைக் கலைஞர். எத்தனை விதமான ராகங்கள்.... மதுரமான பாடல்கள்! நிஜமாலுமே யாரும் கேள்விப்படாத புதுமையான ராகங்களில் எல்லாம் இசையமைத்தவர். கதாகாலட்சேபம் செய்பவர்! *திருவருட்கவிஞர், செந்தமிழ் இசைச்செல்வர், சிவகதாபுலவர் மாமணி, ஹரிகதாபூஷணம்* என்ற ரீதியில் அவர் பெற்ற பட்டங்கள் இருக்கும்!
மொத்தத்தில் சகலகலா வல்லவர்! கடிகார ரிப்பேர், தச்சு வேலை, புத்தகங்களை பைண்ட் செய்தல், மற்றைய மராமத்து வேலைகள் என்று அத்தனை வேலையும் தெரிந்தவர். கணக்கில் சூரப்புலி. *எனது ரெண்டு கையும் கணக்கு எழுதும்* என்று சொல்லிக் கொள்ளுவார். மலைக் கோட்டை வீட்டில் இருந்த போது எனக்கு வரவு/பற்று எல்லாம் சொல்லி ட்ரையல் பாலன்ஸ் சொல்லித் தந்தவர். ஒரு பெரிய லெட்ஜரில் முத்துமுத்தாக எழுதிப் பதிவு செய்வார். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது...
தேள்கடி என்றும் பூரான் கடி என்றும் விஷ ஜந்துக்கள் கடித்த மனிதர்கள் அப்பாவிடம் வந்து விடுவார்கள். அப்பா மௌனமாக இருந்து விபூதி மந்திரித்துக் கொடுப்பார். அழுது அரற்றிக் கொண்டிருந்தவர்கள், வலியின் கடுப்பு சுத்தமாக நீங்கிச் சந்தோஷமாக விடை பெறுவார்கள். பெண்ணிற்கு ஜாதகம் பார்ப்பவர்களும், உத்தியோகம் வேண்டி ஜாதகத்தைக் கொண்டு வருபவர்களும் அன்றாடம் அப்பாவிடம் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் ஒரு சமூக சேவையாகவே அப்பா செய்து வந்தார்.
அப்பா ரொம்பவும் சாதுவானவர் என்றாலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் தான்...கடும் வார்த்தைகளைச் சொல்லிக் காயம் ஏற்படுத்தியதில்லை.. ஆனால் தவறுகளைக் கண்டிக்கும் போது பார்வையில் கனல் தெறிக்கும்! அந்தப் பார்வையை யாரும் கண் கொண்டு காண இயலாது...செந்தழலாய்ச் சினந்திருக்கும்! மிகவும் தன்மானம் மிக்கவர். சுய கௌரவம் முக்கியம். *தோழமையோடும் ஏழ்மை பேசேல்* என்ற ஔவையார் வாக்குப்படி வாழணும் என்பார். உப்பில்லாட்டாலும் சாப்பிடத் தெரியணும்....பிறரிடம் போய்க் கையேந்தக் கூடாது....ஐந்துபைசா கூட கடன் வாங்கக் கூடாது...*கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்!* என்றபடி கடன் வாங்கினால் விளையும் ஆபத்தைச் சுட்டிக் காட்டி எச்சரிப்பார்.
இப்படியாக நிறைய கோல்டன் ரூல்ஸ் வைத்திருப்பார், *நம்மைப் படைத்தவன் பைத்தியக்காரனா என்ன...மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்* என்ற நம்பிக்கையிலேயே இருந்தவர். பொன் வைக்கும் இடத்தில் பூக்களை வைத்துத் திருமணங்களை நடத்திக் காட்டியவர். அத்தனை தூரத்து, கிட்டத்துச் சொந்தங்களுக்கும் அப்பா என்றால் ஒரு நிழல் தரும் ஆலமரம்! *ஐயா ஐயா* என்று அம்மா வழிச் சொந்தங்களும், அப்பா வழிச் சொந்தங்களும் அப்பாவை ரொம்பவே கொண்டாடியதுண்டு. அப்பா, சொந்தங்களின் நலம் விரும்பி. யாருக்கும் ஏதேனும் ஒன்று என்றால் முதலாவது ஆளாகப் போய் நிற்பார். உதவிட தயங்கியதே இல்லை... அதே போல் தான். பணியாற்றிய இடங்களிலும்! அத்தனை மரியாதை...*கும்பிடுறேன் சாமி* என்றபடியே பணக்காரச் செட்டியார்கள் எல்லோரும் பவ்யமாகப் பேசுவார்கள். ஒரு காரியம் ஆகணும் என்றால் குனைந்து போக மாட்டார் அப்பா. எது வந்தாலும் திடமாக *தெய்வ சித்தம்* என்றே ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்.
அப்பாவை இப்படி எல்லாம் ஆராதித்தது நான் மட்டுமல்ல. நாம் அத்தனை பேரும் அவரை அப்படிக் கொண்டாடி இருக்கிறோம். அப்பாவை விட்டுத் திருமணம் செய்து கொண்டு போய் விடக் கூடாது என்றெல்லாம் நான் தீர்மானம் செய்திருக்கிறேன்! நான் எது கேட்டாலும் அப்பா மறுத்ததே இல்லை. ஒரு தடித்த ஜோசியப் புத்தகம் இருக்கும். அப்பா ஜோசியத்தில் மகா நிபுணர். *"பானு...உனக்கு வாகனப் பிராப்தி இருக்கு...விதேசமெல்லாம் போவே"* — எனக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். ஆனால் அந்த தீர்க்கதரிசி சொன்னது ஒவ்வொன்றும் நடந்ததே!
சிந்தித்துப் பார்த்தால், அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான உறவு என்பது ஒரு படகுக்கும் அதைச் செய்த தச்சனுக்கும் உள்ள தொடர்பைப் போன்றது என்பேன். படகு ஆற்றில் விடப்படுவதற்காகவே உருவாக்கப் படுகிறது, இல்லையா? அதனால் அதைச் செய்யும் போது அந்தத் தச்சன் எல்லாவற்றையும் ரொம்பவே கவனமாகச் செய்வான்...எளிதில் கவிழ்ந்து விடாதபடி அவன் அதைச் செய்து முடிப்பான்... எத்தனை கவனமுடன் செய்தாலும் அதை அவனே வைத்துக் கொள்ள முடியாதே! ஆற்றில் விடத்தானே வேண்டும்? அதற்காக அவனும் அந்தப் படகோடு செல்ல முடியுமா என்ன? ஆற்றின் சீற்றத்தை அந்தப் படகு எதிர்கொள்ளணும் என்பது படகின் விதி அல்லவா? அப்படித்தான் நம்மையும் அப்பா அறிவுரை தந்து, புத்தி சொல்லி, அன்பைப் பொழிந்து பக்குவப்படுத்தி இருப்பார்... ஆனாலும், தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌனமாகப் பார்க்கும் தச்சனைப் போன்றதுதான் அப்பாவின் மன நிலையும் இருக்கும்!
அப்பா மதுரை வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் குடும்பம் சற்றே பொருளாதாரப் பின்னடைவு அடைந்தது.... சகோதரிகள் திருமணம் முடிந்து, திருச்சிக்குக் குடி பெயர்தல் நடந்த சமயம் என்று நினைக்கிறேன்... அது சமயம் நான் ஒரு கடிதம் அப்பாவுக்கு எழுதியது நினைவிருக்கு. கரையானால் பாதிக்கப்பட்ட ஒரு ஆலமரத்தை அதனுடைய விழுதுகள் எப்படி விழுந்து விடாமல் காக்குமோ, அது போல் நானும் இருப்பேன் என்று எழுதியிருந்தேன். (அக்கடிதத்தை விஜயாக்கா *'எத்தனை அருமையா எழுதிருக்கே..பானு'* என்று சொல்லுவார்). *"சிதவை வெப்பட்ட ஆல மரத்தை மதவையாய் மற்றதன் கீழூன்றி யாங்கு குதவைமை தந்தைகட் தோன்றிற் றான்பெற்ற புதல்வ(வி) மறைப்பக் கெடும்"* நாலடியாரின் இந்தப் பாடல் இன்னமும் என் நெஞ்சுக்குள் பத்திரமாக இருக்கு...
ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மோடு கூடவே பயணித்த அப்பாவின் அருமையை எழுத்திலாலோ பேசுவதாலோ சத்தியமாக அளவிட்டு முடியாது. நம் ஒவ்வொருவர் மீதும் அவர் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் அநாதி என்பேன். பொதுவாக உலகில் மானிடர்களாகப் பிறந்த அனைவருக்கும் தந்தை என்று ஒருவர் இருப்பது இயற்கையின் நியதி தான்....ஆனால் தந்தையே ஒரு தாயுமானவரும் ஆக இருப்பது என்பது எத்தனை பேருக்கு வாய்த்திருக்கு? எத்தனையோ தருணங்கள்! எனது வாழ்வில் நான் அம்மாவை ரொம்பவும் இழந்த நேரங்கள், எனது திருமண நாட்களிலும், குழந்தை பிறந்த சமயத்திலும் தான்...ஆனால் அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்தவர் அப்பா....
கத்தரிக்காய் பொடி அரைத்துக் கறியும், ரவை வடையும் செய்து போட்டார். சாத்துக்குடியைப் பிழிந்து ஜூஸ் தருவார். அருமையான நாட்கள் அல்லவா அவை? பீட்ரூட் அல்வா....அப்படிப் பண்ணுவார். சாவித்ரிக்கா ரெண்டு போடு போடுவார்...*நான் வர்றதுக்குள்ள என்ன அவசரம் என்று?* ஆனாலும் பிள்ளைத்தாய்ச்சிப் பொண்ணுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்கணும்னு அப்பா செய்திருக்கார். ஒரு வேளை மீனாட்சி மாமி அரைத்து வந்து கொடுத்த மருதாணியை ஒரு கையில் இட்டுக் கொண்டேன்...ஒரே கையால் மறு கைக்கு இட்டுக் கொள்ளத் தெரியலை. அப்பா தான் அழகாகக் கொப்பி வைத்து இட்டுவிட்டார்...
ஜயந்த் டெலிவரி சமயம் தினமும் எனக்கு மதிய வேளைகளில் சாதம் போட்டு, தேநீர் போட்டுத் தருவார். பிரசவ நேரம் நெருங்கிய வேளையில் அந்தச் செவ்வாய்க் கிழமை இரவு சமையற்கட்டில் போய் எனக்குச் சீரகக் கஷாயம் தயாரித்து வந்தார்.....தடால்னு சப்தம்! ஏன்ன ஆச்சு? அப்போது எண்ணெய் இலுப்பச் சட்டி தடுக்கி கீழே ஒரே எண்ணெய்...பாவம்...தூங்கவே மாட்டார். அப்போது சேகர் மொட்டை மாடியில் தூங்குவான். *ஏதேனும் அவசரம்ன்னா கூப்பிடு* என்று விஜயாக்கா தினமும் வந்து பார்த்துச் சொல்லிச் செல்வார்... அப்படி வரும்போது ஏதேனும் ஸ்வீட், வேணும் என்று கூடவே கொண்டு வருவார். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு பாட்டுப் பாடித் தூங்கச் செய்திருக்கிறார். குளைத்திலிருந்து வரும் சமயங்களில் அந்த மலைக் கோட்டை வீட்டு வாசலில் ஒரு நூறு முறையாவது அப்பா நடந்திருப்பார். அவரது எதிர்பார்ப்பில் அத்தனை அன்பும் ஆவலும் இருக்கும்! அந்த நாட்கள் உண்மையிலேயே அழகிய நாட்கள்...
அதுவும் பரத்/ப்ரீத்தி பிறந்து உடனே இந்தியா வர முடியாமல் இரண்டரை ஆண்டுகள் கழித்துப் போன போது அப்படியே அழுது விட்டார். (The twins were born in 1984…and we travelled to India in 1987…so in between a 3-year interval.) சிசேரியன் ஆன எனது வயிற்றைப் பார்த்துக் கலங்கிப் போனது நேற்றுப் போல் இருக்கு. ஓ! எத்தனை புண்ணியம் செய்திருந்தால் இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும் நமக்குக் கிடைத்திருப்பார்கள்! இன்றளவும் அப்பாவையும் அம்மாவையும் நினைக்காத நாளில்லை. நமக்கு உடம்பும், உயிரும், உயர்வும் கொடுத்த அந்தக் கருணைத் தெய்வங்களை எப்போதும் தவறாமல் மனதுக்குள் பூஜிக்கிறேன். எண்ணும் தோறும் இன்று புதியதாய்ப் பிறந்தாற் போல் எனக்குள் புது ரத்தம் பாய்கிறது!
*திருவருளாணை* என்று ஆணையிட்டு நம்மை ஆசீர்வதித்து எழுதும் அப்பாவின் கடிதத்தைக் கண்களில் ஒற்றிக் கொள்ளுகிறேன். அப்பாவின் கரங்களைப் பற்றிய உணர்வு மின்னலாய் ஊடுருவுகிறது. *ரமண சகாயம் நமக்கு உண்டு* என்று அவர் அறுதியிட்டு எழுதிய வாசகங்கள் திருமந்திரமாக நம்மைக் காக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வாழ்வை வரமாகத் தந்தவரை வணங்கி மகிழ்கிறேன். கல்வியாகவும், கலையாகவும், காவியமாகவும், நமக்கொரு பொக்கிஷமாக இருந்த அப்பாவை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பாதகவை நைந்து உருகுகிறது! பால் நிறைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நம்மை அற்புதமாக வளர்த்தவரை நமஸ்கரிக்கிறேன்.
107 வடக்கு வீதியில் அப்பா வாழ்ந்த அந்த மலைக்கோட்டை வீட்டைக் கடக்கையில் மனம் கலத்துப் போகிறது... புற நானூற்றில் அங்கவை, சங்கவை என்ற பறம்புமலைப் பாரியின் இரு பெண்கள் பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வந்து போகும். *"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம்! எம்குன்றும் பிறர்கொளார்! இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின் வென்றரிமுரசின் வேந்தருமெம் குன்றும்கொண்டார்! எந்தையும் இலரே!!"* *நிலாக் காயும் அன்றைய நாளில் எங்கள் தந்தை எங்களோடு இருந்தார்; எங்களது குன்றும் எங்கள் வசம் இருந்தது. ஆனால் நிலாக்காயும் இந்நாளில் முரசம் கொண்ட அரசர்கள் எமது குன்றினைக் கைப்பற்றிக் கொண்டார்கள்; எங்கள் தந்தையும் இல்லாமல் போய் விட்டார்.*
அந்தக் கம்பீரமான அன்பான அப்பா மலைக்கோட்டை வீட்டை விட்டுப் போனாலும் நம் மனக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம்மை அன்றாடம் வழி நடத்துகிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நெஞ்சம் விம்முகிறது...சிப்பி போல இருக்கும் எனது இரு சின்னக் கண்களிலிருந்து பெருகும் கண்ணீர் என்னை நனைத்துப் புனிதப் படுத்துகிறது! நூற்றாண்டு கால வாழ்வில் ஒரு கால் ஆண்டு காலம், அம்மாவோடும் அப்பாவோடும் என்று இருந்த அந்த அழகிய நாட்கள், உண்மையிலேயே பொற்காலம் என்பேன். அதுவும் ஒரு பெண்ணின் வாழ்வில் பிறந்த வீடும் பெற்றோர் துணையும் என்றென்றும் ஒரு தொடர் கதை அல்லவா? அன்புடன் பானுரவி /22nd December 2020
அன்புடன், பானுரவி
With love, Banooravi